கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த ஜூன் 31ஆம் தேதி வெளியான படம் தெலுங்கு படம் ‘கிங்டம்’. இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க, ஸ்ரிகாரா ஸ்டூடியோஸ் வழங்கியது. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் தெலுங்கைத் தாண்டி தமிழ் மற்றும் இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியது. 

இப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தில் ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனம் தெரிவித்து படம் திரையிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்தார். மேலும் அப்படி திரையிட நிறுத்த தவறும்பட்சத்தில், திரையரங்குகளை முற்றுகையிட்டு, படத்தைத் தடுத்து நிறுத்துவோமெனவும் எச்சரித்திருந்தார். அதன் படி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அந்த வகையில் ராமநாதபுரத்தில் நடந்த போராட்டத்தில் அப்பகுதியில் இருக்கும் ஒரு தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு, அத்திரையரங்க வளாகத்தில் இருந்த கிங்டம் பட பேனரை கிழித்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்பட்டது. பின்பு காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

இதனிடையே படம் திரையிடப்பட்டு வரும் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையாளர் எஸ்.எஸ்.ஐ. புரொடக்‌ஷன் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தொடரப்பட்டது. அந்த மனுவில் ஈழத் தமிழர்கள் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படம் எடுக்கப்படவில்லை என்றும் படம் திரையிடுவதில் தலையிட நாம் தமிழர் கட்சியினருக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது காவல்துறை தரப்பில், மனுதாரர் கொடுத்த மனு இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்றும் அதனால் வழக்கில் விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் விசாரணையை நாளை ஒத்தி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் சார்பில், படத்தில் ஈழத் தமிழர் குறித்து தவறான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் படத்திற்கு விளம்பரம் தேடுவதற்காகவே பாதுகாப்பு கேட்டு இந்த மனு தொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் போராட்டத்தின் போது, எந்த அசம்பாவித நிகழ்வுகளும் நடக்கவில்லை என்றும் படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களை தடுக்கவில்லை என்றும் கூறி மனு குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சென்சார் போர்டு அனுமதித்த ஒரு திரைப்படத்தை வேறு எந்த வகையிலும் தடுக்க முடியாது என்றும் எந்த போராட்டமாக இருந்தாலும் ஜனநாயக ரீதியில் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் படம் திரையிடுவதை தடுக்க கூடாது எனவும் தெரிவித்த அவர் படத்தை தடுப்பதைத் தாண்டி, வழங்கிய சென்சார் சான்றிதழை ரத்து செய்யக்கோரி சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம் அல்லது படத்தை யாரும் பார்க்க வேண்டாம் எனப் பிரச்சாரம் செய்யலாம் எனக் கூறி, மனு தொடர்பாகப் பதிலளிக்க காவல்துறைக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் உத்தரவிட்டார். அடுத்தகட்ட விசாரணையை நாளை(07.08.2025) ஒத்தி வைத்தார்.