கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு; வருத்தம் தெரிவித்த படக்குழு

150

கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த ஜூன் 31ஆம் தேதி வெளியான படம் தெலுங்கு படம் ‘கிங்டம்’. இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க, ஸ்ரிகாரா ஸ்டூடியோஸ் வழங்கியது. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் தெலுங்கைத் தாண்டி தமிழ் மற்றும் இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியது. 

இப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தில் ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனம் தெரிவித்து படம் திரையிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்தார். மேலும் அப்படி திரையிட நிறுத்த தவறும்பட்சத்தில், திரையரங்குகளை முற்றுகையிட்டு, படத்தைத் தடுத்து நிறுத்துவோமெனவும் எச்சரித்திருந்தார். அதன் படி ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் அப்பகுதியில் இருக்கும் ஒரு தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு, அத்திரையரங்க வளாகத்தில் இருந்த கிங்டம் பட பேனரை கிழித்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்பட்டது. பின்பு காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

இவர்களின் எதிர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையாளர் எஸ்.எஸ்.ஐ. புரொடக்‌ஷன் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் தொடரப்பட்டுள்ளது. இது நிலுவையில் இருக்கிறது. 

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “கிங்டம் படத்தின் சில காட்சி அமைப்புகள் தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக கேள்விப் பட்டோம். தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். இந்தக் கதை முற்றிலும் கற்பனையானது எனப் படத்தின் மறுப்புப் பகுதியில் (disclaimer portion) குறிப்பிட்டுள்ளோம் என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம். இதையும் மீறி, மக்களின் உணர்வுகள் ஏதேனும் வகையில் புண்பட்டிருந்தால், அதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். கிங்டம் திரைப்படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Naam Tamilar Katchi Production vijay devarakonda
இதையும் படியுங்கள்
Subscribe