ADVERTISEMENT

"அனைத்து போராட்டங்களிலும் நிற்பேன்" - காவிரி விவகாரம் குறித்து கிச்சா சுதீப்

04:39 PM Sep 26, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையின்படி காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு, காவிரியிலிருந்து 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் குடிநீர் பிரச்சனை, நீர்ப்பற்றாக்குறை இருப்பதால் உத்தரவைப் பின்பற்ற இயலாது; 2 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்து விட முடியும் என்று கர்நாடக அரசு தெரிவித்தது.

இதனிடையே காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. மேலும், மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது எனக் கடந்த 21 ஆம் தேதி தெரிவித்தது. அந்த தீர்ப்பை ஏற்றுக் கர்நாடக அரசு காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்து விட்டது.

இதனால், கர்நாடக அரசைக் கண்டித்து அந்த மாநிலத்தில் கர்நாடக அமைப்புகள், விவசாயிகள் மற்றும் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி கடந்த 22 ஆம் தேதி மண்டியா, அத்திப்பள்ளி டோல்கேட், கிருஷ்ணராஜபுரம், மைசூரு வங்கி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் வாழும் பகுதிக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாளை (25-09-23) பெங்களூருவில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துப் போராட்டங்களிலும் நான் எப்போதும் துணை நிற்பதாகக் கன்னட முன்னணி நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த ஆண்டும் காவிரி பிரச்சனை தொடங்கிவிட்டது. கன்னட ஆதரவு அமைப்புகள் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னட மொழியின் அனைத்துப் போராட்டங்களிலும் நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்.

பருவமழை பெய்யாததால், மக்களின் விவசாயம் மட்டுமின்றி விவசாயிகளின் குடிநீருக்கும் கடும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பருவமழையைத் தவிர வேறு குடிநீர் ஆதாரம் இல்லாததால் காவிரியை நம்பியுள்ளோம். நிபுணர்கள் கர்நாடகத்தின் தற்போதைய வறட்சி நிலையைப் பற்றி உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்திடமும், மத்திய அரசிடமும் தெரிவிக்க வேண்டும். தமிழக முதல்வர்களுடன் சுமுகமாகப் பேசி இந்தப் பிரச்சனைக்கு தற்காலிகமாகத் தீர்வு காண முடியும் என்று முந்தைய சில முதல்வர்களைப் போலவே நமது முதல்வர் சித்தராமையாவும் கூறியதாகக் கேள்விப்பட்டேன். அவர் தற்போதைய வறட்சி-தண்ணீர் பிரச்சனைக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக விவசாயிகளுக்குக் குறுவை பயிருக்குத் தண்ணீர் கிடைக்கட்டும். ஆனால் முதலில் கர்நாடகாவில் இருக்கும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், கர்நாடகாவின் நிலைமையை மத்திய அரசுக்குப் புரிய வைக்கவும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நமது தண்ணீர் நமது உரிமை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT