Skip to main content

“தவறுகளை நியாயப்படுத்த முயல்கின்றனர்” - குஷ்பு காட்டம்

 

khushbu about mansoor ali khan issue

 

1990 மற்றும் 2000களில் வில்லனாக பிரபலமடைந்த மன்சூர் அலிகான், அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் விஜய், த்ரிஷா நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 19 ஆம் தேதி வெளியான லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். 

 

இதனிடையே பல எதிர்ப்புக்கு மத்தியில், மன்சூர் அலிகான் விளக்கமளித்தார். அதில், “நான் எப்பொழுதும் என்னுடன் நடிக்கும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன். நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புகின்றனர்” எனக் கூறியிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், “நடிகை த்ரிஷா பற்றி நான் தவறாகப் பேசவில்லை. உண்மையில் நான் அவரைப் பாராட்டித்தான் பேசினேன். அதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். நடிகர் சங்கம் இவ்விவகாரத்தில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. ஒரு விஷயம் சர்ச்சையானால் அதுபற்றி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எந்த விளக்கமும் கேட்கவில்லை. என் மீது தவறாக நடவடிக்கை எடுத்துள்ளனர். 4 மணி நேரத்துக்குள் அவர்கள் இந்த நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும். என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அவர்கள் என் பக்கம் நிற்கிறார்கள். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லை.” என்றார். 

 

இதையடுத்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என தொடர்ந்து மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் குஷ்பு மீண்டும் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,  “சில மனிதர்கள்... தங்களின் தவறுகளை மறைக்க பிறர் செய்த தவறுகளை உதாரணம் காட்டி தங்கள் செயல்களை நியாயப்படுத்த முயல்கின்றனர். மன்சூர் அலிகான் பிறரை நோக்கி விரல் நீட்டுவதை விட, அவரையே அவர் பார்க்க வேண்டும். உங்கள் ஆணவமும் எதிர்க்கும் மனப்பான்மையும் நீங்கள் எவ்வளவு பெண் வெறுப்பு மற்றும் அகங்கார நபர் என்பதைக் காட்டுகிறது. இதிலிருந்து விடுபடலாம் என்று நினைத்தால், அது முடியாது.” என காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.