உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் நேற்று முன்தினம் (02.07.2024) ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் உரையாற்றிய ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபாவின் பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்த பின் மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்து குழந்தைகள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ இந்த சம்பவத்திற்கு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இது குறித்து குஷ்பூ தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஹத்ராஸ் பேரழிவிலிருந்து மக்கள் எழுந்து வருவார்கள் என்று நம்புகிறேன். மேலும், கடவுளால் அனுப்பப்பட்டவை என எதுவும் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் நம்புகிறேன்.
உயர்ந்த சக்தியை நம்புபவர்கள் இதுபோன்ற விஷயங்களில் விழ மாட்டார்கள். கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். நீங்கள் விடும் ஒவ்வொரு மூச்சிலும் அதை உணர்கிறீர்கள். இந்தப்பேரழிவைக்கடவுள் அனுப்பியிருக்க முடியாது. இந்தக் கூட்டநெரிசலுக்குக்காரணமானவர்கள் ஒவ்வொருவரும் கைதுசெய்யப்பட்டுத்தண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தங்களுடைய தவறானசெயல்களுக்காகத்தண்டிக்கப்படும் போது தான், உண்மையாகவே ‘கடவுள் அனுப்பினார்’ என்ற வாசகம் நியாயப்படுத்தும்” என்று பதிவிட்டுள்ளார்.