தமிழ்நாட்டில் தற்போது இரு சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று காவலர்களின் கொடூர சித்ரவதை காரனமாக சிவகங்கையைச் சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்தது. இன்னொரு சம்பவம் வரதட்சணை மற்றும் கணவரின் உடல் ரீதியான டார்ச்சரால் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா என்ற புதுமணப்பெண்ணின் தற்கொலை.  

இந்த இரு சம்பவங்கள் குறித்து பலரும் தங்களது ஆதங்கத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர். திரைப்பிரபலங்களில் இயக்குநர் வசந்த பாலன், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் குஷ்பு இந்த இரு சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய, “லாக்கப் கொலையைத் தாண்டி வரதட்சணையால் பல பெண்கள் தற்கொலை பண்ணிக்கிறாங்க. அதை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. வரதட்சணை வாங்குவது மட்டுமில்ல கொடுப்பதும் தவறுதான். அப்படி இருக்கும் போது ஏன் பெற்றோர் இப்படி செய்றாங்க. எது செய்தாலும் அந்த பெண் பெயரில் செய்யுங்கள். ஏன் வரதட்சணையா கொடுக்குறீங்க. பெற்றோரிடம் நான் கேட்டுக்கொள்வது இதுதான். வரதட்சணை கொடுக்காதீங்க, அல்லது ஆசையா கொடுக்கிறேன்ற பெயரிலும் கொடுக்காதீங்க. அது வேண்டாம். திருமணம் செஞ்சு பெண்ணை அனுப்பினாலும் அவள் உங்க மகள் தான். 

இனிமேல் யாராவது உங்க பொண்ணுக்கு என்ன வரதட்சணை கொடுக்குறீங்கன்னு கேட்டா அவங்களுக்கு பெண்ண கொடுக்காதீங்க. இரண்டு பெண் குழந்தைக்கு அம்மா என்ற முறையில் சொல்றேன், என் குழந்தைகளை கட்டி கொடுத்தாலும் அவங்க என் குழந்தைகள் தான். அதுக்கப்புறம் தான் இன்னொருத்தவங்க மனைவி, மருமகள். ஆனால் ஒரு பிரச்சனை என்றால் அவள் என் மகளாகத்தான் திரும்ப வீட்டுக்கு வருவாள். அதனால் மகளை கட்டி கொடுக்கும் போது என்ன பிரச்சனை வந்தாலும் தைரியமா வெளியில பேசு என்று சொல்லிக் கொடுங்க. அதுதான் முக்கியம். அதே போல லாக்கப் கொலைகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கனும். ஒரு மனிதரின் உயிர் என்பது சாதாரண விஷயம் கிடையாது. லாக்கப் கொலைக்காக முதல்வரிடம் ஒரு கேள்வி... நீங்க என்ன பன்னிகிட்டு இருக்கீங்க. உங்களுக்கு கீழத்தான் சட்ட ஒழுங்கு வரும். தயவு செஞ்சு இதுக்கு எல்லாத்துக்கும் பதில் சொல்லுங்க” என்றார். 

பின்பு அவரிடம் சினிமா நடிகர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சினிமா மட்டும் இல்லை, எல்லா இடத்திலும் போதைப்பொருள் பழக்கம் இருக்கு. கொக்கைன், கஞ்சா மட்டும் இல்லை, ஊசி மூலமும் போதைப் பொருள் உட்கொள்கின்றனர். சினிமாவில் நடிப்பதால் யாரும் சூப்பர் ஹீரோ கிடையாது. அவர்களுக்கும் சராசரி மனிதர்கள் தான். அவங்களுக்கும் போதைப்பொருள் பழக்கம் ஏற்பட வாய்புள்ளது. பிரச்சனையை தீர்க்க வழி பார்க்காமல் பூதக்கண்ணாடி வைத்து பெரிதாக்க கூடாது. அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.