'KGF2'; The famous OTT company that delighted the fans

Advertisment

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'கே.ஜி.எஃப் 2'. 'ஹோம்பாலே ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று உலகளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து 'கே.ஜி.எஃப்' படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் 'கே.ஜி.எஃப் 2' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஜூன் 3-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ஏற்கனவே அமேசான் ப்ரைமில் வாடகைக்கு எடுக்கும் முறையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த படத்தை, அமேசான் சந்தாதாரர்கள் ரூ.200 செலுத்தி, குறிப்பிட்ட நாட்களுக்குள் பார்த்துக்கொள்ளலாம். வாடகை செலுத்தி படம் பார்ப்பதற்கான முறையில் படம் வெளியான போதே, சில நாட்கள் கழித்து சந்தாதாரர்கள் இப்படத்தை இலவசமாகப் பார்த்துக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியானது. இப்போது வெளியாகியிருக்கும் அறிவிப்பின்படி அமேசான் சந்தாதாரர்கள் இப்படத்தை ஜூன் 3 முதல் இலவசமாகப் பார்த்துக்கொள்ளலாம். இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. இப்படம் தமிழ், கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் அமேசானில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.