kgf production hombale film about cauvery issue

Advertisment

காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரைத் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்திய நிலையில், தமிழகத்தில் விவசாய அமைப்புகள், விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டும்; தமிழகத்திற்குக் காவிரியில் நீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல கர்நாடகாவில், தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திற்குக் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று முன்தினம் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கன்னட திரையுலகை சார்ந்த பிரபலங்கள் பலரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னணி நடிகர்களான சிவராஜ் குமார், கிச்சா சுதீப் உள்ளிட்டோர் இரு அரசுகளும் பேசி சுமூகமாக முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். மேலும் கிச்சாசுதீப், "கன்னட மொழியின் அனைத்துப் போராட்டங்களிலும் நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன். நமது தண்ணீர் நமது உரிமை" என கூறியிருந்தார். இந்த நிலையில் கன்னட முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே ஃபிலிம்ஸ், தற்போது காவிரி விவகாரம் தொடர்பாக தங்களதுகருத்தை பகிர்ந்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், "காவேரி நம் உயிர் நீர். கர்நாடகாவில் இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். பகிர்ந்து வாழும் பெருந்தன்மையே நம் நிலத்தின் இயல்பு. இப்போது இந்த தாராள மனம் வராத சாபத்தில் விழுந்து விட்டது. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படலாம். நம் தேவைக்கே போதுமான தண்ணீர் இல்லாதபோது, ​​தானம் செய்யும் ஆற்றல் எங்கிருந்து வருகிறது? இந்தப் போராட்டக் கடலில் நாம் அனைவரும் ஆயிரக்கணக்கான நதிகளைப் போல ஒன்றிணைவோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் கே.ஜி.எஃப் படம் மூலம் பிரபலமடைந்தது. தமிழில் தற்போது கீர்த்தி சுரேஷை வைத்து 'ரகு தாத்தா' என்ற தலைப்பில் ஒரு படம் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.