the kerala story producer about his film banned on tamilnadu west bengal

Advertisment

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியானது முதலே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்ததோடு, கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் வழக்கின் விசாரணையின் போது படத்திற்குக் கேரள உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.

பின்பு பல எதிர்ப்புகளைத் தாண்டி கடந்த 5 ஆம் தேதி இப்படம் வெளியானது. கலவையான விமர்சனமே ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இதையடுத்து தமிழகத்தில் இந்த படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகரித்து வர மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தானாக முன்வந்து தி கேரள ஸ்டோரி படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்தன. மேற்கு வங்கத்திலும் இப்படத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. இதை எதிர்த்து படக்குழு தரப்பு நீதிமன்றம் சென்ற நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகள் விளக்கமளிக்க வேண்டி நோட்டீஸ் அனுப்பியது. பின்பு தமிழ்நாடு அரசு சார்பில் மக்களிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால் திரையரங்குகளே தாங்களாக முன்வந்து படத்தை திரையிடுவதை நிறுத்தியுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மறைமுகமாகத் தடை செய்யக்கூடாது என உத்தரவிட்டு படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கிட நீதிமன்றம் வலியுறுத்தியது. மேலும் மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்ட தடையையும் நீக்கியது. ஆனால் மேற்கு வங்கத்தில் இப்படம் இப்போதும் திரையிடப்படவில்லை எனத்தகவல் வெளியாகியுள்ளது. இப்படி படம் வெளியாவதற்கு முன்பு, பின்பு ஏகப்பட்ட சர்ச்சைகளைக் கிளப்பிய இந்த படத்தை பாஜக மற்றும் வலது சாரிகள் தொடர்ந்து ஆதரித்த வண்ணம் உள்ளனர். இப்படம் தற்போது வரை ரூ.226 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பளார் விபுல் அம்ருத்லால் ஷா, தமிழ்நாட்டில் திரையிடப்படாதது குறித்தும் மேற்கு வங்கத்தில் தடை செய்யப்பட்டது குறித்தும் ஒரு ஆங்கில ஊடகத்தில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், "மேற்கு வங்கம் மற்றும் தமிழக அரசுகள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முற்றிலுமாக புறக்கணித்துள்ளன. திரையரங்கு உரிமையாளர்களிடம் படங்களை திரையிடக்கூடாது என மிரட்டி வருகின்றனர். அதை மீறி திரையிட்டால் திரையரங்கில் உரிமம் புதுப்பிக்கப்படாது என்றும், தாக்குதல் நடந்தால் பாதுகாப்பு அளிக்கப்படாது என்றும் காவல்துறையினரும் அதிகாரிகளும் திரையரங்க உரிமையாளர்களிடம் கூறுகிறார்கள். எனவே, ரிஸ்க் எடுத்து படத்தை வெளியிட யாரும் முன்வரவில்லை.

ஜனநாயகம் இறந்துவிட்டது என எப்போதும் கூறி வரும் இந்த இரண்டு அரசுகளும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கவில்லை. இது ஒரு முரண்பாடான நிலை. காங்கிரஸ் வெளிநாடுகளுக்குச் சென்று ஜனநாயகத்திற்காக குரல் எழுப்புகிறது.ஆனால் அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் இதைத்தான் செய்கிறார்கள். இந்த இரண்டு மாநிலங்களின் பார்வையாளர்களும் மக்களும் இந்த பெண்களுடன் நிற்கத் தயாராக இல்லாத ஒரு அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும்.உண்மையில் இந்த பயங்கரவாத கும்பலை அம்பலப்படுத்துவதை தடுக்க உதவுகின்றன.

படத்தை திரையிட சட்டப்படி எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். இந்த நாட்டில் உச்ச நீதிமன்றத்திற்கு மேல் எதுவும் இல்லை. இப்போது, இந்த அரசாங்கங்களுக்கு எதிராக தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கவும், எதிர்காலத்தில் யாரும் இதைச் செய்யாத அளவுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவும் உச்சநீதிமன்றத்தை கேட்டுக்கொள்கிறோம். இதையெல்லாம் தாண்டி இந்த பிரச்சனைக்காக அந்த கட்சிக்காரர்களுடன் தெருவில் இறங்கி சண்டையிட முடியாது" என்றார்.