/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/out_1.jpg)
விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5 ஆம் தேதி வெளியான படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியான பிறகு மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் இப்படத்தை திரையிடத் தடை விதிக்கக் கோரி பலரும் கூறி வந்தனர்.
இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் இப்படத்திற்குத் தடைவிதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு விசாரணைக்கு வந்தபோது வரும் 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
இதனிடையே தமிழகத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி இப்படம் திரையிடப்படாது என்றும் கடந்த 7 ஆம் தேதி மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்தன. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இப்படத்தை திரையிடத் தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த 8 ஆம் தேதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து மேற்கு வங்க உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தமிழ்நாட்டில் படத்தை திரையிட உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரியும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாட்டின் பிற பகுதிகளில் வெளியிடப்பட்ட போது மேற்கு வங்கம் வேறுபட்டதல்ல என்று கூறியது. மேலும் இது தொடர்பாக விளக்கமளிக்கதமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிற 17 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசு சார்பில் “தி கேரளா ஸ்டோரி படத்திற்கு மக்களிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால் திரையரங்குகளே தாங்களாகமுன்வந்து படத்தை திரையிடுவதை நிறுத்தியுள்ளனர்; திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்துவிட்டதாகக் கூறுவது முற்றிலும் பொய்யான தகவல்” என்று விளக்கம் அளித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)