மலையாளத்தில் மத்திய இணை அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா’. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரவின் நாராயணன் இயக்கியுள்ள இப்படத்தை பனீந்திர குமார் தயாரித்துள்ளார். கிரீஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் கோர்ட் ரூம் ட்ராமவாக உருவாகியுள்ளது.

Advertisment

இப்படத்திற்கு கேரளா திருவனந்தபுரம் சென்சார் போர்டு அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியிருந்தனர். படம் கடந்த ஜூன் 27 அன்று வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால் படத்தின் இயக்குநர் கடந்த ஜூன் 23ஆம் தேதி சென்சார் போர்டின் முடிவு காரணமாக இப்படம் அறிவித்த தேதியில் வெளியாகாது என தெரிவித்திருந்தார். ஆனால் தெளிவான காரணத்தை வெளியிடவில்லை. இதனிடையே ரிலீஸ் தள்ளிப் போவதற்கு காரணம் சென்சார் போர்டின் தலைமையகமான மும்மை அதிகாரிகள் இப்படத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தது தான் என தகவல் வெளியானது.

படத்தை பார்த்த மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள், டைட்டில் ரோலான ஜானகி என்ற பெயர், கடவுள் பெயரான சீதாவின் பெயரோடு நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதாபாத்திரத்திற்கு இந்த பெயர் வைத்திருப்பது மத உணர்வுகளை புண்படுத்தக்கூடும் எனவும் ஆட்சேபனை தெரிவித்ததாகக் கூறப்பட்டது. மேலும் ஜானகி பெயருக்கு பதில் வேறு ஒரு பெயரை மாற்ற படக்குழுவிற்கு அறிவுறுத்தியதாகவும் சொல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தை நீதிமன்றம் பார்க்க வேண்டும் என கேரள உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம் மனு தாரரின் கோரிக்கையை ஏற்றுள்ளது. அதன்படி நீதிபதி நாகரேஷ் வருகின்ற ஜூலை 7ஆம் தேதி காலை 10 மணியளவில் படம் பார்க்கவுள்ளார். பின்பு அடுத்த நாளான ஜூலை 8ஆம் தேதி இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அன்று படம் வெளியாகுவது குறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.