இந்திய திரைப்படத்துறையில் உயரிய விருதாக் கருதப்படும் ‘தாதா சாகேப் பால்கே விருது’ அண்மையில் மலையாள நடிகர் மோகன்லால் பெற்றிருந்தார். 2023ஆம் ஆண்டிற்கான விருதாக இந்த விருதினை கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றிருந்தார். 

Advertisment

இந்த நிலையில் கேரள அரசு மோகன்லாலுக்காக பாராட்டு விழா எடுக்கவுள்ளது. ‘மலையாள வானொலம், லால் சலாம்’ என்ற தலைப்பில் அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மோகன்லாலை கௌரவிக்கிறார். 

Advertisment

பாராட்டு விழாவைத் தொடர்ந்து, மோகன்லாலின் படங்களின் பாடல்கள் அடங்கிய டி.கே. ராஜீவ் குமார் இயக்கிய ‘ஆடம் நமக்குப் பாடல்’ என்ற படம் திரையிடப்படுகிறது. பாடகர்கள் சுஜாதா மோகன், ஸ்வேதா மோகன், சித்தாரா, ஆர்யா தயாள், மஞ்சரி, ஜோத்ஸ்னா, மிருதுளா வாரியர், நித்யா மமென், சயனோரா, ராஜலட்சுமி, கல்பனா ராகவேந்திரா, ரெமி மற்றும் திஷா பிரகாஷ் ஆகியோர் மோகன்லால் பட பாடல்களைப் பாடுகிறார்கள். ஒவ்வொரு பாடலுக்கு முன்பும், மோகன்லாலுடன் நடித்த ஊர்வசி, ஷோபனா, மஞ்சு வாரியர், பார்வதி, கார்த்திகா, மீனா, நித்யா மேனன், லிஸ்ஸி, ரஞ்சினி, ரம்யா கிருஷ்ணன், லட்சுமி கோபாலசாமி, ஸ்வேதா மேனன் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் பேசவிருக்கிறார்கள். 

மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் கிட்டத்தட்ட 360 படங்களில் நடித்துள்ளார். தமிழில் இருவர், பாப் கார்ன், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான ‘புலி முருகன்’ படம் தான் மலையாளத் திரையுலகில் ரூ.100 கோடி கிளப்பை திறந்து வைத்தது. அதே போல் இவரது எம்புரான் படம் தான் மலையாள படங்களில் முதல் நாளில் அதிக வசூலித்த திரைப்படம் என கூறப்படுகிறது. ரூ.70 கோடிக்கும் மேல் இப்படம் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. தனது திறமையான நடிப்பாலும் அமைதியான பண்பாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். இப்போது த்ரிஷ்யம் 3, விருஷபா உள்ளிட்ட இன்னும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுவரை இவர் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் 5 தேசிய விருதுகள் வென்றுள்ளார். 

Advertisment