பாலியல் புகார்; பற்றி எரியும் கேரள திரையுலகம்; நடிகைக்கு மிரட்டல் 

kerala actress baakiyalakshmi complaint regards she has a Threat regards hema committie

மலையாளத் திரையுலகில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு முன்னணி நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில் பாலியல் கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் மற்றும் வேலை செய்யும் அனைத்து நிலை பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத் த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மலையாள திரைத்துறையின் பெண்கள் அமைப்பினர் அம்மாநில முதல்வருக்கு மனு அளித்திருந்தனர். அதனடிப்படையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018ஆம் ஆண்டு கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.

பின்பு 2019ஆம் ஆண்டு கேரள முதல்வரிடம் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்த நிலையில் தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் “நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் மலையாள திரையுலகில் பெருமளவு இருந்து வருகிறது. பாலியல்ரீதியாக இணங்கும் நடிகைகளை ஒத்துழைக்கும் நடிகைகள் என வகைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கே பட வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. பாலியல் ரீதியாக ஒத்துழைக்க மறுக்கும் நடிகைகளுக்கு சமூக ஊடகங்கள் மூலம் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பிரச்சனைக்குரியவர்கள் என முத்திரை குத்தப்படுகிறார்கள்” என பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

இதையடுத்து பல நடிகைகள் தங்களுக்கும் பாலியல் தொல்லை நடந்ததாக புகார் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் மலையாள இயக்குநர் ரஞ்சித் மீது பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா பாலியல் குற்றச்சாட்டு வைத்தார். ஆனால் இதை ரஞ்சித் மறுத்திருந்தார். பின்பு மலையாள நடிகை ரேவதி சம்பத், நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். அதே போல் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த ரியாஸ் கான் மீதும் நடிகை ரேவதி சம்பத் பாலியல் புகார் தெரிவித்தார். ஆனால் மூவருமே இந்த புகார்களை மறுத்திருந்தனர். மேலும் சினிமா அகாடமி தலைவர் பொறுப்பிலிருந்து இயக்குநர் ரஞ்சித்தும் நடிகர் சங்கப் பொறுப்பிலிருந்து சித்திக்கும் ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து நடிகை மினுமுனீர் கடந்த 2012ஆம் ஆண்டு படப்பிடிப்பின் போது நடிகர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. முகேஷ் மற்றும் மணியன் பிள்ளை ராஜு, இடைவேளை பாபு, ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் தனக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தல் செய்ததாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கேரள அரசு நான்கு பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட ஒரு குழு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை பாக்கியலட்சுமி மர்ம நபர்களால் தனக்கு மிரட்டல் வருவதாக தெரிவித்துள்ளார். மலையாள திரைத்துறையின் பெண்கள் அமைப்பினரை ஆதரித்தால் தாக்கப்படுவாய் என தொலைப்பேசியில் வாயிலாக மிரட்டல் வந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை பாக்கியலட்சுமி பின்னணி குரல் கலைஞராகவும் சங்க செயல்பாட்டாளருமாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Kerala mollywood
இதையும் படியுங்கள்
Subscribe