Skip to main content

எங்கெல்லாம் கபடி போட்டி நடக்கிறதோ, அங்கெல்லாம் படமாகும் 'கென்னடி கிளப்'

Published on 03/01/2019 | Edited on 03/01/2019
Kennedy club

 

பாரதிராஜா - சசிகுமார் - சுசீந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'கென்னடி கிளப்'. இப்படம் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாவதால் இந்தியா முழுவதும் எங்கெல்லாம் கபடி போட்டி நடக்கிறதோ அங்கே நேரில் சென்று படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 5 இடங்களில் நடைபெற்ற நிஜ போட்டிகள் நடக்கும் களத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதுதவிர, மும்பை அஹமதாபாத் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. 

 

நிஜ கபடி போட்டி நடக்கும் களம் என்பதால் 10 நாட்களுக்கு முன்பே திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல், ஒவ்வொருவரையும் திரட்டுவதற்கு 3 நாட்கள் ஆகியுள்ளது. மேலும், மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நான்கு கேமராக்களை வைத்து எடுப்பது என்பது சவாலாகவே இருந்திருக்கிறது. செலவுகள் கூடுதலாக இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் படம் தரமானதாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மகாராஷ்டிரா சென்றுள்ளது படக்குழு. அங்கிருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் இசாத்பூர் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 25 ஆயிரம் பேர் பார்க்கக் கூடிய வகையில் பிரம்மாண்டமாக 'செட்' அமைத்து மைதானம் தயார் செய்து  விளையாட்டு வீரர்களின் காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர்.

 

 

இதன்பிறகு, பஞ்சாப் ஹரியானாவில் நடக்கும் போட்டிக்கிடையில் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். இங்கு 600 பெண்கள் கபடி குழுக்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக பெண்கள் கபடி குழுக்களைக் கொண்ட மாநிலம் இதுதான். அதன்பிறகு, கதாநாயகனும் பாரதிராஜாவும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வார்கள். அந்த காட்சிகளின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் அதற்கென பிரத்யேக 'செட்' அமைத்து நடக்கவுள்ளது. அதேபோல, பயிற்சியாளருக்கான படப்பிடிப்பும் அங்கேயே நடைபெறவுள்ளது. இப்படத்தில் பாரதிராஜா, சசிகுமாரைத் தவிர, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், 'புதுமுகம்' மீனாட்சி, காயத்ரி, நீது, சௌம்யா, ஸ்ம்ரிதி, சௌந்தர்யா மற்றும் பலர் நடிக்கிறார்கள். டி.இமானின் இசையில் ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, கலையை பி.சேகர் அமைக்கிறார். சீன மொழியில் டப்பிங் உரிமத்திற்கு ரூ. 2 கோடிக்கு படம் வெளியாவதற்கு முன்பே விற்பனையாகியுள்ளது. சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு உள்ள  நிலையில், இறுதிக்கட்டத்திற்கு நகர்ந்துள்ள இப்படம் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்