
நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் என்ற நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படத்தில் சாவித்திரியாகவே நடித்தார். அப்படத்தில் அவரது நடிப்பு பெரும் பாராட்டை பெற்றதுடன் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. அதை தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்த பென்குயின் படம், கடந்த ஜூன் மாதம் அமேசான் ப்ரைமில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதை தொடர்ந்து, அவர் கதாநாயகியாக நடிக்கும் மற்றொரு படமான மிஸ் இந்தியா திரைப்படம், வரும் நவம்பர் 4ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை புதுமுக இயக்குனர் நரேந்திரநாத் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷோடு நதியா, ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில், இன்று மாலை ஆறுமணிக்கு ‘மிஸ் இந்தியா’ பட " தீம்" பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது.