keerthy suresh Raghuthatha Teaser released

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப்பல்வேறு மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் கதாநாயகியாக ஜெயம் ரவியின் சைரன், முதன்மை கதாபாத்திரத்தில் ரகு தாத்தா, கண்ணி வெடி உள்ளிட்ட படங்களைக்கைவசம் வைத்துள்ளார். இதில் சைரன் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வருகிற 26 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ad

இந்த நிலையில், ரகு தாத்தா படத்தின் டீசர் தற்போது வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சுமன் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹோம்பாலே நிறுவனத்தின் முதல் தமிழ் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் க்ளிம்ஸ் வீடியோக்கள் வெளியானது.

Advertisment

இதைத்தொடர்ந்து வெளியாகியுள்ள ட்ரைலரில், இந்தித்திணிப்புகுறித்து பேசியுள்ளது போல் தெரிகிறது. இப்படம் தைரியமிக்க ஒரு பெண்தன் கொள்கைகளுக்காக நடத்தும் போராட்டத்தை நகைச்சுவை கலந்து ஒரு குடும்ப படமாக உருவாக்கவுள்ளதாகப் படக்குழு முன்னதாகவே தெரிவித்திருந்தது. அதன்படி இந்தித்திணிப்பிற்கு எதிராக குரல் கொடுக்கிறார். தனது வேலையில் ப்ரோமோஷனை தவிர்க்கிறார். மேலும் மக்களை ஒன்று சேர்த்து போராட்டம் நடத்துகிறார்.

கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், மக்களுடன் இருக்கும் போராட்ட காட்சியில் இந்தித்திணிப்பு குறித்து எடுத்துரைத்து, ‘இதையெல்லாம் மீறி இந்தியை திணித்தே தீருவோம் என்றால்... இந்தி தெரியாது போயா...’ என்று பேசும் வசனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த டீசர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.விரைவில் திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.