
கதாநாயகியாகவும் கதையின் நாயகியாகவும் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். கடைசியாக தனது இந்தி அறிமுகம படமான பேபி ஜான் படத்தில் நடித்திருந்தார். இப்போது கைவசம் அவர் கதையின் நாயகியாக தமிழில் நடித்துள்ள கண்ணி வெடி மற்றும் ரிவால்வர் ரீட்டா படத்தை வைத்துள்ளார். மேலும் இந்தியில் அக்கா எனும் வெப் தொடரை வைத்துள்ளார்.
இதனிடையே தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மணமுடிந்தார். இதையடுத்து அவர் நடிக்கும் படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இடையே சில தகவல்கள் மட்டும் வெளியாகியிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட்டில் ரொமான்ஸ் காமெடி ஜானரில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு இதில் கூடுதல் தகவலாக பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்பீர் கபூரிடம் கதாநாயகனாக நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு எந்த அப்டேட்டும் வரவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் ராஜ்குமார் ராவ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ராஜ்குமார் ராவ் தனது மனைவியுடன் இணைந்து நடத்தும் கம்பா பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கவும் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் கல்வி துறையில் நடக்கும் மோசடிகளை வைத்து உருவாக்கப்படுவதாகவும் ஜூன் 1ஆம் தேதி முதல் மும்பையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.