பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடிக்க சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவரது இசையில் படத்தின் முதல் பாடலாக வெளியான ‘ஊரும் ப்ளட்’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இரண்டாவது பாடலாக வெளியான ‘நல்லாரு போ’ பாடல் போதிய வரவேற்பு பெறவில்லை. இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகிறது.
இப்படம் குறித்து இயக்குநர் கீர்த்திஸ்வரன் கூறுகையில், “நான் சுதா கொங்கராவிடம் 8 வருடங்களாக உதவி இயக்குநராக இருந்திருக்கிறேன். இது என்னுடைய முதல் படம். மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் முதல் சந்திப்பிலே கதை ஓகே ஆகிவிட்டது. இந்த கதையை ரஜினி சாருக்கு 30 வயசு இருந்தா எப்படி இருக்கும். அதை நினைத்துக் கொண்டு தான் கதை எழுதினேன். கதையை கேட்டவுடன் தயாரிப்பாளர்கள் யாரை நடிக்க வைக்கலா எனக் கேட்டனர். பிரதீப் ரங்கநாதன் என சொன்னவுடன் அவரிடம் கேட்டனர். அவரும் கதை கேட்டு நடிக்க ஒப்புகொண்டார்.
தாலி என்பது 80 மற்றும் 90 காலகட்டத்தில் ஒரு செண்டிமெண்டான விஷயம். நான் ஒரு 90ஸ் மற்றும் ஜென்சி தலைமுறையின் பார்டரில் வளர்ந்தவன். என்னுடைய பார்வையில் தாலி என்பது எப்படி பார்க்கப்படுகிறது, அதுதான் இப்படத்தின் கதை. இதில் எல்லா பழைய விஷயங்களோட புதுப் பார்வை இருக்கும். சமூக பொறுப்புள்ள படமாகவும் இருக்கும்” என்றார்.