
2015-ல் வெளியான 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் 'கீர்த்தி சுரேஷ்'. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் நடித்து வருகிறார். 2018-ல் வெளியான 'மகாநதி' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அந்த ஆண்டின் 'சிறந்த நடிகை'-க்கான தேசிய விருது பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'சாணிக் காயிதம்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக கீர்த்தி சுரேஷ் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதனிடையே தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள 'சர்காரு வாரி பாட்டா' படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பரசுராம் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். நவீன், ரவிசங்கர் உள்ளிட்ட நான்கு பேர் தயாரித்துள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷிற்கு திரையங்கு முன்பு கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. சினிமா ரசிகர்கள் தனது பிடித்த நடிகர்களின் படங்கள் வெளியாகுவதை முன்னிட்டு திரையங்கு முன்பு கட் அவுட் வைப்பார்கள். அந்த வகையில் நேற்று வெளியான 'சர்காரு வாரி பாட்டா' படத்திற்காக ஆந்திராவில் உள்ள சுதர்சன் திரையரங்கில் கீர்த்தி சுரேஷிற்கு 35-அடி உயரமுள்ள கட் அவுட் வைத்துள்ளனர் அவரது ரசிகர்கள். அந்த கட் அவுட் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.