/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/205_20.jpg)
90-களில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான ரஞ்சித், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹூரோவாக நடித்துள்ள படம் கவுண்டம்பாளையம். இப்படத்தை அவரே இயக்கவும் செய்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியது.
இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில் திடீரென படம் தள்ளி போகவுள்ளதாக தெரிவித்தது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ரஞ்சித், இப்படத்தை வெளியிடக்கூடாது எனத் திரையரங்க உரிமையாளர்களுக்கு மிரட்டல் வருவதாகவும் இது தொடர்பாக அமைச்சர்கள், காவல் உயர் அதிகாரிகளைச் சந்தித்து மனு அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், “எங்கள் படத்தை திரையிட்டால் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும் திரையரங்கை சேதப்படுத்துவோம் என்றும் ஒரு பிரிவினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆகவே படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுவதும் 150 திரையரங்குகளில் இந்தப் படத்தை திரையிட முடிவு செய்த நிலையில் குறிப்பிட்ட பிரிவினரின் எதிர்ப்பு காரணமாக படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் பின்வாங்கி விட்டனர். எந்த சாதி மத மொழிக்கு எதிராகவும் இந்தப் படம் எடுக்கப்படவில்லை. முறையான தணிக்கை சான்றிதழ் பெற்ற இந்தப் படத்தை திரையிடுவதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், “எந்தத்திரையரங்கு உரிமையாளர்களும் காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை. மனுதாரரும் எந்தத்திரையரங்கத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை. 150 திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது இயலாது” எனத்தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து “எந்தத்திரையரங்குகளில் பாதுகாப்பு தேவை என்பது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் படக்குழு மனு அளிக்கும் பட்சத்தில், அந்தத்திரையரங்குக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)