நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கவின், ப்ரீத்தி அஸ்ரானி ஜோடியாக நடித்துள்ள படம் ‘கிஸ்’. ரோமியோ பிக்சர்ஸ் பேனரில் ராகும் தயாரித்துள்ள இப்படத்தில் விடிவி கணேஷ், ஆர்ஜே விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இவரது இசையில் அனிருத் குரலில் வெளியான ‘திருடி’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இப்படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் நாளை(19.09.2025) வெளியாகவுள்ளது. இந்த நிலையில் கவின், ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, “இந்த படம் என்னுடைய 6வது படம். இதுவரைக்கும் பண்ண படங்கள கம்பேர் பண்ணும் போது, ஒரு முழு நீள ஜாலி படமாக இது இருக்கும். நாங்க எல்லாருமே சந்தோஷம என்ஜாய் பண்ணி வேலை பண்ணிருக்கோம். நிச்சயமா அந்த உழைப்பு படத்துல தெரியுது. அது உங்களுக்கும் பிடிக்கும்னு நம்புறேன். பார்த்துட்டு சொல்லுங்க. ஒன்னுமே இல்லாத ஒருத்தன இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்து விட்டது நீங்கதான். இன்னமும் ரொம்ப தூரம் கூட்டிட்டு போவீங்கன்னு நம்புறேன். எப்போதும் போல் படம் பார்த்துட்டு கருத்து சொல்லுங்க. எப்போதும் போல கூட இருங்க” என்றார்.
கவினின் முந்தைய படங்களான ‘ஸ்டார்’ மற்றும் ‘ப்ளடி பெக்கர்’ படம் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் இப்படத்தை அவர் பெரிதும் நம்பியிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்து வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க், நயன்தாரவுடன் ஒரு படம் ஆகியவை கைவசம் வைத்துள்ளார்.