சமீப காலமாகத் தனது மக்கள் இயக்கத்தை தீவிரமாக செயல்பட வைத்த விஜய், அதை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை தனது அரசியல் கட்சிக்கு வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட விஜய், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுமையாக கட்சி பணிகளை கவனிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புதிதாக அரசியல் கட்சி பெயரை அறிவித்துள்ள விஜய்க்கு, அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரி, “தளபதி விஜய்யை வரவேற்கிறோம். ஒரு சுவாரசியமான சூழலில் தமிழக அரசியலுக்கு வருகிறார். ஒருவேளை சிறந்த நேரம் அமையலாம்.
விஜய்யால் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? என்பதை பார்ப்போம். சமீபகால வரலாற்றில் பல சூப்பர் ஸ்டார்கள் அரசியலில் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விஜய்யின் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்படும். வாழ்த்துகள்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.