நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க. இந்தியா கூட்டணியிலும் அ.தி.மு.க, அவர்கள் தலைமையில் ஒரு தனி கூட்டணியிலும் தேர்தலை சந்திக்கிறது.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் உள்ளிட்ட தி.மு.க முன்னணி நிர்வாகிகளைச் சந்தித்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை எனத் தெரிவித்தார். மேலும் “மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் (ராஜ்ய சபா) ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், கமல்ஹாசனின் அறிவிப்பிற்கு கஸ்தூரி கடுமையாக அவரை விமர்சித்துள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “கமல்ஹாசன் திமுகவிடம் விலை போனதில் ஆச்சரியமில்லை. அவர் மிகவும் மலிவாக ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டிற்கு விலை போனது தான் ஆச்சரியமாக இருந்தது. ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் மய்யத்தில் இணைந்தவர்களுக்கு பெரிய அறை. சோகமான விஷயம் என்னவென்றால், அவர் எளிதில் ஜனாதிபதி நியமன எம்.பி.யாகிவிட்டார். அவர் மிகவும் தகுதியானவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.