ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் ‘உருட்டு உருட்டு’. நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்பு நடந்தது. 

இந்நிகழ்வினில் இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசியதாவது, “இந்த விழாவிற்கு நான் வந்ததுக்கு பல காரணங்கள் இருக்கிறது. அதில் முதல் காரணம் வஜிரவேலு, நம்ம இயக்குநர் பாஸ்கருடைய சித்தப்பா, ஒரு காலத்தில் எனக்கு அவர் கார்டியனா இருந்தவர். இயக்குநர் பாஸ்கர் இப்போது எனக்கு தோளோடு தோள் வந்து பக்கத்துல நிக்கிறாரு. இனி அடுத்து என்னை விட உயரமா நிற்பார். அவரை சின்ன வயதில் இருந்து பார்க்கிறேன். அவருக்கு என் வாழ்த்துக்கள் அப்புறம் முக்கியமா தமிழ் திரையுலகின் தாரக மந்திரம் என்றைக்கும் அழிக்க முடியாத நிரந்தரமான பெயர் நாகேஷ். அவருக்காக தான் வந்தேன். ஆனந்த் பாபு எனக்கு நெருங்கிய நண்பர், நாகேஷ் சார் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தில்  நடிச்சிருக்கார். நாகேஷ் சாரை பத்தி பேசாமல் எந்த ஒரு சினிமா மீடியாவும் தப்பிக்க முடியாது. அவ்வளவு சாதனைகள் செய்துள்ளார்.  நாகேஷை பற்றி சொல்ல வேண்டும் என்றால் பாலச்சந்தர் பற்றியும் சொல்ல வேண்டும் இருவரும் செய்த சாதனைகள் அவ்வளவு இருக்கிறது. அவர் பேரனை நான் ஆசிர்வதிக்க வேண்டும் எனது தான் வந்தேன்.  

ஆனந்த பாபுவுடைய சூழ்நிலையை  நான் கண் முன்னாடி பார்த்திருக்கிறேன். தனுஷை  அறிமுகப்படுத்த தயாரிப்பாளர்களை நான் தேடிப் போகவில்லை. நானே தயாரிப்பாளரா இருந்தேன். நானே இயக்குநராவும் இருந்தேன். ஆனால் ஆனந்த் பாபு தன் பையனுக்காக ஒவ்வொரு அலுவலகத்துக்கும், போனார். என்னுடைய அலுவலகத்துக்கும் வந்திருந்தார். என் பையன்களுடைய அலுவலகத்துக்கும் போயிருக்கார், அந்த தந்தையினுடைய வலிக்கு நீங்கதான் நிவாரணம் கொடுக்க வேண்டும். அதுக்காக இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும்” என்றார்.