Skip to main content

ஆஸ்கருக்கு செல்லும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’

Published on 10/01/2023 | Edited on 10/01/2023

 

the kashmir files movie in oscar list

 

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் மாதம் 12 ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதனால் தேர்வுக்காக அனுப்பப்பட்ட படங்களை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

இந்தியா சார்பில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' (Chhello Show) படம் அனுப்பப்பட்டது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' படமும் படக்குழு சார்பில் தனிப்பட்ட முறையில் 15 பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாமினேஷனுக்கான முந்தைய இறுதிச்சுற்று பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், அதில் சிறந்த சர்வதேச திரைப்படம் பிரிவில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட 'செல்லோ ஷோ' படமும், சிறந்த பாடல் [Music (Original Song)] பிரிவில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலும் இடம் பெற்றது. மேலும், ஆல் தட் ப்ரீத்ஸ் மற்றும் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படங்கள் சிறந்த ஆவணப்படம் மற்றும் ஆவண குறும்பட பிரிவுகளில் இடம்பெற்றன. 

 

இந்த நிலையில் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு ஆஸ்கர் விருதுக்கு தகுதியான 301 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்', அலியா பட் நடித்த 'கங்குபாய் கத்தியவாடி', இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட குஜராத்தி படம் 'செல்லோ ஷோ', மாதவனின் 'ராக்கெட்ரி நம்பி விளைவு', பார்த்திபனின் 'இரவின் நிழல்', விவேக் அக்னிஹோத்ரியின் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ உள்ளிட்ட சில படங்கள் இடம்பெற்றுள்ளன. 

 

இதில்  'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ சில மாதங்களுக்கு முன்பு கோவாவில் நடந்த 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது படத்தை பார்த்த தேர்வுக்குழு தலைவர் நடாவ் லேபிட், "இப்படம் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மிகவும் கெளரவமான இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற திரைப்படத்தைப் பார்ப்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த எங்கள் அனைவருக்கும் மன உளைச்சலையும் தந்துள்ளது" என வெளிப்படையாக விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

 

இதையடுத்து சர்வதேச திரைப்பட விருதில் சர்ச்சையை கிளப்பிய திரைப்படம் அதே சர்வதேச விருதான ஆஸ்கருக்கு தகுதியான பட்டியலில் இடம் பெற்றுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்கள் இறுதிப் பரிந்துரைகளில் இடம்பெறலாம் அல்லது இடம்பெறாமல் போகலாம்.  இறுதி செய்யப்பட்ட நாமினேஷன் பட்டியல் வரும்  24 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"கலைத்துறையைச் சார்ந்தவர்கள் இதற்குப் பதில் சொல்ல முடியாது" - திருமாவளவன் தாக்கு

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

thirumavalavan about the kashmir files national award

 

இந்தியத் திரைத்துறையில் மிக முக்கிய விருதாகப் பார்க்கப்படும் தேசிய திரைப்பட விருது ஆண்டுதோறும் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான 69வது தேசிய விருது அறிவிப்பு அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் கலைஞர்கள் மற்றும் தமிழ் படங்கள் என்று பார்க்கையில், சிறந்த தமிழ் திரைப்படம் என்ற பிரிவில் கடைசி விவசாயி வென்றுள்ளது. மேலும் அப்படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த பின்னணி பாடகி என்ற பிரிவில் இரவின் நிழல் படத்தில் இடம் பெற்ற 'மாயவா சாயவா...' பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு அறிவிக்கப்பட்டது. 

 

அதைத் தவிர்த்து திரைப்படம் சாராத பிரிவில், சிறப்பு விருதாக (ஸ்பெஷல் மென்ஸன்), 'கருவறை' என்ற ஆவணப்படத்திற்காக ஸ்ரீ காந்த் தேவாவிற்கும் சிறந்த கல்வித் திரைப்படம் என்ற பிரிவில் லெனின் இயக்கிய 'சிற்பங்களின் சிற்பங்கள்' படத்திற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த படம் என்ற பிரிவில் மாதவன் இயக்கி நடித்த 'ராக்கெட்ரி' படத்திற்கும் ஸ்பெஷல் ஜுரி விருது, இந்தியில் விஷ்ணுவர்தன் இயக்கிய 'ஷெர்ஷா' படத்திற்கும் கிடைத்துள்ளது.

 

இதில், தமிழில் முக்கிய படங்களாகப் பார்க்கப்பட்ட சூர்யா - த.செ. ஞானவேல் கூட்டணியின் ஜெய் பீம், பா. ரஞ்சித் - ஆர்யா கூட்டணியின் சார்பட்டா பரம்பரை, மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியின் கர்ணன் உள்ளிட்ட படங்கள் ஒரு விருதினைக் கூட பெறவில்லை. குறிப்பாக ஜெய் பீம் படத்திற்கு விருது அறிவிக்காதது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதற்கு நானி, சுசீந்திரன், பி.சி ஸ்ரீராம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

 

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், செய்தியாளர்களைச் சந்தித்த வேளையில் அவரிடம் இது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு விருது கிடைத்திருப்பது குறித்த கேள்விக்கு, "அது ஒரு முரண்பாடான படம். இன்றைக்கு எந்த அளவுக்கு இந்த ஆட்சியாளர்கள், எந்த சிந்தனை ஓட்டத்தில் இருக்கிறார்கள், கலைத்துறையை எவ்வாறு அவர்கள் கையாள பார்க்கிறார்கள் என்பது இந்த படத்திற்கு அவர்கள் விருது கொடுக்கப்பட்டதிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும்" எனப் பதிலளித்தார். 

 

இப்படத்திற்கு விருது வழங்கியதற்கு யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு, "கலைத்துறையை சார்ந்தவர்கள் இதற்கு கருத்து சொல்ல முடியாது. வெளியில் இருக்கிற எங்களை போன்றவர்கள் மற்றும் படம் பார்க்கக் கூடியவர்கள் தான் கருத்து சொல்ல முடியும். என் படத்திற்கு ஏன் கொடுக்கவில்லை என்று ஒரு இயக்குநர் கேள்வி கேட்க முடியாது. அது நாகரிகம் இல்லை" என்றார். இப்படத்திற்கு விருது கிடைத்திருப்பது சர்ச்சையான நிலையில் முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

"மாஸ்டர்" - தி காஷ்மீர் ஃபைல்ஸ் பட இயக்குநரை புகழ்ந்த மாதவன்

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

madhavan appreciate Vivek Agnihotri

 

பிரபல இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. 90களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் மற்றும் உண்மைக் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்திருந்தது. இப்படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைக் கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் வந்த நிலையில், பெரும் சர்ச்சை உண்டானது. 

 

மேலும், கோவாவில் 53 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, அவ்விழாவின் தேர்வுக்குழு தலைவர் வெறுப்புணர்வைத் தூண்டுவதாக இருக்கிறது என விமர்சித்திருந்தார். இப்படி பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்திய இப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, தற்போது தி வேக்ஸின் வார் (The Vaccine War) என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் கோரோனோவிற்கு எதிரான இந்தியாவின் போரின் அடிப்படையிலும், உலகளாவிய நெருக்கடியைச் சமாளிக்க மருத்துவத் துறை எடுத்த முயற்சிகளின் அடிப்படையிலும் உருவாகியுள்ளதாக தெரிகிறது. 

 

இப்படம் அடுத்த மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அமெரிக்காவில் நேற்று திரையிடப்பட்டது. இப்படத்தை பார்த்த மாதவன் பட இயக்குநரை வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கி, மிகவும் சவாலான காலகட்டத்தில் தேசத்தைப் பாதுகாப்பாக வைத்திருந்த இந்திய விஞ்ஞான சமூகத்தின் அற்புதமான தியாகங்கள் மற்றும் சாதனைகள் வியப்படைய செய்தது. 

 

கதை சொல்லுவதில் மாஸ்டராக இருக்கும் விவேக் அக்னிஹோத்ரி இக்கதையை இயக்கியுள்ளார். அவர் உங்களை ஒரே நேரத்தில் உற்சாகப்படுத்தவும், கைதட்டவும், அழவும், மகிழ்ச்சியாகவும் ஆக்குபவர்" என குறிப்பிட்டு படத்தில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகளை பாராட்டினார். மேலும், "படத்தை கண்டிப்பாக திரையரங்கிற்கு சென்று பாருங்கள். லாக்டவுன் காலகட்டத்தில் நாம் உயிர்வாழ உதவிய பெண்களுக்காக டிக்கெட்டை வாங்குங்கள்" என குறிப்பிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy)