the kashmir files director about manipur issue

மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம்77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

மேலும் திரைப் பிரபலங்கள் வைரமுத்து, அக்‌ஷய் குமார், ஜி.வி. பிரகாஷ், பிரியா பவானி ஷங்கர், கஸ்தூரி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் 'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, "வங்கதேசம், பஞ்சாப், காஷ்மீர், வங்காளம், கேரளா, அஸ்ஸாம், பஸ்தர்இந்த வரிசையில் தற்போது மணிப்பூர். ஒவ்வொரு முறையும் நம் அப்பாவி தாய்மார்களும் சகோதரிகளும் மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்குப் பலியாகின்றனர். ஒரு மனிதனாக, ஒவ்வொரு முறையும் நான் உடைந்து போகிறேன். நான் வெட்கப்படுகிறேன். அவர்களுக்கு உதவ முடியாமல் போனதற்கு வருத்தப்படுகிறேன்" எனப் பதிவிட்டிருந்தார்.

Advertisment

இதனைத்தொடர்ந்து அண்மையில், அவர் இயக்கிய 'தி காஷ்மீர் பைல்ஸ் அன்ரிப்போர்டெட்' (The Kashmir Files Unreported) வெப் தொடரின் ட்ரைலரை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "காஷ்மீரி இந்து இனப்படுகொலையில் இந்திய நீதித்துறை கண்மூடித்தனமாகவும் ஊமையாகவும் நிற்கிறது. நமது அரசியலமைப்பில் உறுதியளித்தபடி காஷ்மீரி இந்துக்களின் உரிமையைப் பாதுகாப்பதில் அது தோல்வியடைந்தது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப்பதிவிற்குக் கீழ், மணிப்பூர் சம்பவத்தைப் பற்றி மணிப்பூர் ஃபைல்ஸ் என்ற தலைப்பில் படத்தை எடுங்கள் என்ற தொனியில், "நேரத்தை வீணாக்காதீர்கள், ஒரு மனிதராய் இருந்தால் மணிப்பூர் ஃபைல்ஸ் எடுங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த அவர், "என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. ஆனால் எல்லா படத்தையும் நான் மட்டுமே எடுக்க வேண்டும் என நினைக்கிறீர்களா. வேறு யாருமே இல்லையா" எனப் பதிவிட்டுள்ளார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் பாஜக ஆளும் ஹரியானா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் சிலரும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை ப்ரொமோட் செய்தனர். மேலும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் காவல்துறையினருக்கு விடுமுறை வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.