
சென்னையில் பபாசி நடத்தும் சென்னை புத்தக கண்காட்சி விழாவில் தினசரி ஒரு பிரபலம் கலந்துகொண்டு மேடையில் பேசுவார்கள். அந்த வகையில் திரைப்பட இயக்குனரும், சிறந்த மேடைப் பேச்சாளருமான கரு. பழனியப்பன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, புத்தகங்கள் படிப்பதன் முக்கியத்துவத்தை தெரிவித்து வந்துகொண்டிருந்த கரு.பழனியப்பன் இடையே, நான் உலகத்தில் எவ்வளவு பெரிய அறிவாளி தெரியுமா, உலகத்திலுள்ள என்னவெல்லாம் படித்திருக்கிறேன் தெரியுமா, நான் தலைகீழாக கம்பராமாயணம் பத்தாயிரம் பாட்டு எப்படி சொல்வேன் தெரியுமா, அப்படி சொல்வதில் ஒரு பெருமையையும் இல்லை. சிலர் பத்தாயிரம் பாட்ட மனப்பாடும் செய்து என்ன செய்வார்கள், ஒரு செல்போனை தட்டிவிட்டு உங்களுடைய மொத்த இமேஜையும் கெடுத்துக்கொள்வீரகள். நாற்பத்தைந்து ஆண்டுகாலமாக சேர்த்துவைத்த இமேஜ், ஒரு செல்போனை தட்டிவிட்டதால் போய்விட்டதே. பத்தாயிரம் பாட்டு மனப்பாடம் செய்து என்ன பயன், மனம் விசாலப்படாமல் நீங்கள் படித்து என்ன பயன் என்று பேசியிருந்தார்.
முன்னதாக நடிகர் சிவக்குமார் மதுரையில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு சென்றிருந்தார். அப்போது, அவரிடம் ரசிகர் ஒருவர் அனுமதியின்றி செல்ஃபீ எடுக்க முயற்சி செய்ய, அவரது மொபைலை சிவக்குமார் தட்டிவிட்டது பெரும் சர்ச்சையானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, நடிகர் சிவக்குமாரை பலர் விமர்சித்தனர். நடிகர் சிவக்குமார் நடிகர் என்பதை தாண்டி, நல்ல ஒரு ஓவியர் மற்றும் கம்பராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாச கதைகளை பற்றி பலமணி நேரம் மேடைகளில் பேசும் பேச்சாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.