Skip to main content

"இவ்வளவு சிறந்த அரசியல் தெரிந்தவரா" - ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து கரு.பழனியப்பன் வியப்பு

Published on 02/05/2022 | Edited on 02/05/2022

 

Karu Palaniappan

 

'ஒத்த செருப்பு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'இரவின் நிழல்' படத்தை இயக்கி நடித்துள்ளார் பார்த்திபன். உலகிலேயே நான் லீனியர் முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில், ஏ.ஆர் ரஹ்மான், பார்த்திபன், ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு, சமுத்திரக்கனி, பாடலாசிரியர் மதன் கார்க்கி, இயக்குநர் கரு.பழனியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பன் பேசுகையில், "இந்தப் படம் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்றவுடன் சிங்கிள் ஷாட்டில் எப்படி படம் எடுக்க முடியும் என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. உலகத்தில் இது போல எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் ஷாட் மாறும்போது ஸ்டிச் செய்யப்பட்ட படங்கள். சமீபத்தில் 1917 என்று ஒரு படம் வந்தது. அந்தப் படத்தின் நீளமான காட்சி என்பது 8 நிமிடங்கள் மட்டும்தான். ஆனால், இரவின் நிழல் திரைப்படம் 96 நிமிடங்களும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம்.

 

இது எப்படி சாத்தியம் என்பதைத் தாண்டி தமிழ்நாட்டில் உள்ள ஒருத்தரால் இது எப்படி சாத்தியம் என்ற சந்தேகமும் இங்கு பலருக்குள்ளது. அரிய பெரிய காரியங்களை எல்லாம் மேலைநாட்டில் உள்ள ஒருவன்தான் பண்ணவேண்டும், தமிழ்நாட்டில் உள்ளவனால் பண்ணமுடியாது என்ற எண்ணம் நம்மிடம் உள்ளது. இல்லை, எங்ககிட்டயும் பார்த்திபன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் எடுத்த படம்தான் இரவின் நிழல் என்று உலகத்திற்கு அறிவிக்கக்கூடிய படம்தான் இந்தப் படம். 

 

எல்லாமே நம்மிடம் இருக்கிறது. இங்கிருந்தும் பெரிய விஷயங்களை பண்ணமுடியும் என்பதற்கு உதாரணம் இந்தப் படம். அதனால்தான் இந்தப் படத்தில் பங்குபெற வேண்டுமென நினைத்தேன் என்று ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னார். சிறந்த இசையமைப்பாளராக அறியப்பட்ட ரஹ்மான், இன்று இவ்வளவு சிறந்த அரசியல் தெரிந்தவரா என்று அனைவரையும் நினைக்க வைக்கிறார். எவரொருவர் நம் அரசியலை பேசுகிறாரோ அவர் மனதுக்கு நெருக்கமாகிவிடுகிறார். தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படும் ரஹ்மான் இந்தப் படத்தில் பணியாற்றி இருப்பது மகிழ்ச்சி" எனப் பேசினார்.   

 

 

சார்ந்த செய்திகள்