
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் 50 படங்களுக்கு மேல் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். கடைசியாக சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்போது கார்த்தி - நலன் குமாரசாமி கூட்டணியில் உருவாகும் ‘வா வாத்தியார்’ படத்தை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே பாடகராகவும் வலம் வருகிறார். இவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டும் அடித்துள்ளது.
இந்த நிலையில் இன்று அவர் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில் அவரது நண்பரும் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவருமான கார்த்திக் சுப்புராஜ், “என்னுடைய அன்பு நண்பர் மற்றும் பிரதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கிட்டத்தட்ட என்னுடைய எல்லா படங்களுக்கு ஆன்மாவாக இருக்கிறீர்கள். அதற்கு நன்றி. குறிப்பாக ரெட்ரோ படத்திற்கு நீங்கள் இசையமைத்த இசை எனக்கும் ஆடியன்ஸுக்கும் ரொம்ப ஸ்பெஷல். அப்புறம் பாஸ், சீக்கிரம் சென்னைக்கு வந்து பர்த்டே ட்ரீட் கொடுக்கவும்” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சந்தோஷ் நராயணன் கொழும்பில் இருப்பதாக நேற்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தோஷ் நாராயணன், கார்த்திக் சுப்புராஜின் பேட்ட படத்தை தவிர்த்து அவரின் அனைத்து படத்திற்கும் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.