karthik subburaj about retro 50 days

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த மே 1ஆம் தேதி வெளியான படம் ‘ரெட்ரோ’. ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருந்த இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.235 கோடிக்கும் மேலாக வசூலித்தது. படத்தின் லாபத்தில் சூர்யா தனது அகரம் அறக்கட்டளைக்கு ரூ.10 கோடி வழங்கினார். இதையடுத்து படம் கடந்த மாதம் 30ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.

இந்த நிலையில் இப்படம் திரையரங்கில் வெளியாகி இன்றுடன் 50 நாள் ஆகிறது. இது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உருக்கமுடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தனிப்பட்ட முறையில் எனக்கு இது ஒரு எமோஷ்னலான ரோலர் கோஸ்டர் பயணம். படம் வெளியான பிறகு கிட்டத்தட்ட ஒரு போரையே எதிர்கொண்டது. ஒரு அஜெண்டாவுடன் குறிவைக்கப்பட்ட வெறுப்புகள் இருந்த போதிலும் அதைத் தாண்டி நிறைய அன்பு இருந்தது. அது தான் இந்த போரை ஜெயிக்க வைத்தது. நேர்மையான விமர்சனங்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. அதை கருத்தில் எடுத்து கொண்டு எதிர்கால படங்களில் அது பிரதிபலிக்கும் வகையில் பார்த்து கொள்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment