Karthik Subbaraj

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான ரஜினிகாந்த், இம்மாத தொடக்கத்தில் தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார். அவரது அரசியல் வருகை குறித்து நீடித்து வந்த குழப்பம் அவ்வறிவிப்பு மூலம் முடிவுக்கு வந்ததால் அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும், இம்மாத இறுதியில் தனது கட்சி தொடர்பான முழு விவரங்களையும் விரிவாக அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இதனையடுத்து, பாதியில் நிறுத்தப்பட்டிருந்த 'அண்ணாத்த' படத்தின் பணிகளை முடித்துக் கொடுக்கும் முனைப்போடு ஹைதராபாத் விரைந்தார். கரோனா காரணமாகத் தடைப்பட்டிருந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி முழுவீச்சில் நடந்து வந்த நிலையில், எதிர்பாராத விதமாக படக்குழுவினர் சிலருக்கு கரோனா தொற்று உறுதியானது. இது ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வதிர்ச்சி அடங்குவதற்குள் ரத்த அழுத்தம் காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பாக பேசப்பட்டது. அதனையடுத்து, உடல்நலம் சீராகி வீடு திரும்பிய ரஜினிகாந்தை, தொடர் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

Advertisment

கட்சி தொடர்பான விவரங்களை அறிவிப்பதாக ரஜினிகாந்த் கூறிய நாளுக்கு, மூன்று நாட்கள் மட்டுமே எஞ்சியிருந்ததால் குழப்பம் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக 'தான் அரசியலுக்கு வரப்போவதில்லை' என்ற அறிவிப்பு ரஜினிகாந்த் தரப்பில் இருந்து இன்று காலை வெளியானது. கனத்த இதயத்துடன் இம்முடிவை ஏற்றுக்கொண்ட அவரது ரசிகர்கள், தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், ரஜினியின் தீவிர ரசிகரும் திரைப்பட இயக்குனருமான கார்த்திக் சுப்பராஜ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தலைவா... வருத்தப்பட வேண்டாம். உங்களைப் போன்ற நல்ல தலைவர் கிடைப்பதற்கு நாங்கள் தகுதியற்றவர்களாக இருக்கலாம். நீங்கள் எங்களுக்கு முக்கியம் தலைவா. எப்போதும் போல உங்களை நேசிக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.