karthi trisha twitter conversation about ponniyin selvan 2

Advertisment

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த செப்டம்பரில் வெளியான படம் பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதுவரை உலக அளவில் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமான 'பொன்னியின் செல்வன் 2' வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடல் 'அக நக' பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் ப்ரொமோஷன் பணிகளைத்தொடங்கியுள்ளது படக்குழு. அதன் ஒரு பகுதியாக ட்விட்டரில் 'வல்லவரையன் வந்தியத்தேவன்' கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தியும் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷாவும் உரையாடல் மேற்கொண்டனர்.

கார்த்தி, "இளையபிராட்டி...ஹாய்" எனப் பதிவிட, த்ரிஷா, "என்ன வாணர்குல இளவரசே?" எனப் பதிவிட்டார். பின்பு கார்த்தி, "தங்கள் தரிசனம் கிடைக்குமா?" எனக் கேட்க, "ம்ம்ம்…யோசித்து செய்தி அனுப்புகிறேன்" என்றார் த்ரிஷா. அடுத்துகார்த்தி, "கடல் கடந்து சென்று உங்கள் ஆணையை நிறைவேற்றிவிட்டு வருபவனுக்கு மோரை மட்டும் கொடுத்து அனுப்பி விடமாட்டீர்களே?" எனக் கேட்க, "வேறென்ன வேண்டும் வந்தியத்தேவருக்கு? கொடுத்த பொருளைத்திருப்பிக் கேட்கப் போகிறீர்களா?" என த்ரிஷா கேள்வி கேட்டார். அதற்குப் பதிலளித்த கார்த்தி, "ஐய்யயோ என் உயிர் என்றுமே உங்களுடையது தேவி.நான் பழையாறை வந்ததும் நாம் வைப் ஆக ஒரு பாடல் தயார் செய்யச் சொல்லுங்களேன்" என்றபதிவிற்கு, "வீரரே பாடல் எப்போதோ ரெடி. மாலை 6 மணி வரை காத்திருங்கள்" எனத்ரிஷா குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இதே போன்று முதல் பாகத்தின் வெளியீட்டின் போதும் ட்விட்டரில் படக்குழுவினர் ஜாலியாக உரையாடினர். மேலும், அவர்களது ட்விட்டர் பக்கத்தின் பெயரை 'பொன்னியின் செல்வன்' படத்தில் அவர்கள் நடித்த கதாபாத்திரத்தின் பெயரைக் குறிப்பிட்டு மாற்றினர் என்பது நினைவுகூறத்தக்கது.