கார்த்தி நடிப்பில் இந்தாண்டு இதுவரை ஒரு படம் கூட வெளியாகவில்லை. அவர் கேமியோவாக தெலுங்கில் நடித்த ‘ஹிட் 3’ படம் மட்டும் கடந்த மே 1ஆம் தேதி வெளியாகவில்லை. இப்போது அவர் வா வாத்தியார், சர்தார் 2 மற்றும் மார்ஷல் ஆகிய படங்களை வைத்துள்ளார். இதில் வா வாத்தியார் படம் நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கிறது. சர்தார் 2, வரும் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது தற்போது அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போவதாக கூறப்படுகிறது. மார்ஷல் படத்தின் பணிகள் நடந்து வருகிறது.  

Advertisment

இந்த நிலையில் ‘வா வாத்தியார்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை நலன் குமாரசாமி இயக்க கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கு இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு மே மாதம் வெளியானது. அதில் போலீஸ் கெட்டப்பில் கார்த்தி இடம் பெற்றிருந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பரில் படத்தின் டீசர் வெளியானது. அதை பார்க்கையில் எம்.ஜிஆர். ரசிகராக கார்த்தி நடித்துள்ளது தெரிந்தது. பின்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘உயிர் பத்திக்காம’ பாடல் கடந்த பிப்ரவரியில் வெளியாகியிருந்தது. இப்படத்தின் அறிவிப்பு 2023ஆம் ஆண்டு வெளியாகியிருந்த நிலையில் அதற்கடுத்து ஒவ்வொரு அப்டேட்டும் தாமதமாகவே வெளியாகி வருகிறது. 

இந்த நிலையில் இப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் குதிரை மேல் ஒருவர் உட்காந்திருக்கிறார். ஆனால் யார் என்பதை தெளிவாக விளக்கப்படவில்லை. இந்த அறிவிப்பின் மூலம் இந்தாண்டு கார்த்தி நடிப்பில் ஒரு படம் வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.