/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/366_7.jpg)
நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'தண்டேல் '. இப்படத்தில் பிரகாஷ் பெலவாடி, கருணாகரன், 'ஆடுகளம்' நரேன், பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் சர்வைவல் டிராமா ஜானரிலான இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இதனை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார்.
பிப்ரவரி 7ஆம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் நிலையில் படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் ட்ரைலரும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் கார்த்தி, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது கார்த்தி பேசுகையில், “இது எனக்கு முக்கியமான மேடை. தெலுங்கு திரையுலகிலிருந்து எனக்கு ஏராளமான அன்பு கிடைத்திருக்கிறது. அந்த அன்பை திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்பாக இதனை கருதுகிறேன். இங்கு வந்த பிறகுதான் நாக சைதன்யா என்னிடம், இந்த கதை 2018 ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவம் என்று சொன்னார். கேட்பதற்கு இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. நம் ஊரில் மீன் பிடிக்கும் மீனவர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு சென்று மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் குஜராத்திற்குச் சென்று படகில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி பாகிஸ்தானுக்கு சென்று மாட்டிக் கொள்கிறார்கள் என்றார். பிறகு அங்கிருந்து எப்படி தப்பித்து வந்தார்கள் என்பதை ஒரு அழகான காதல் கதையாக இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது.
எவ்வளவு பெரிய திரில்லாக இருந்தாலும் அது டைட்டானிக்காக இருந்தாலும் அதற்குள் ஒரு லவ் ஸ்டோரி தேவைப்படுகிறது. அந்த லவ் தான் மனதில் நிற்கிறது. 20 பேரிடம் ரைட்ஸ் வாங்கி அதை ஒரு அழகான காதல் கதையாக உருவாக்கி வழங்கியிருக்கிறார்கள் என்றால் இந்த கதை மீது தயாரிப்பாளர் எவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்க வேண்டும். இந்தப் படத்திற்காக ஒன்றரை ஆண்டு காலம் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாகவே இந்த படத்தை இந்தியா முழுவதும் நம்பிக்கையுடன் வெளியிடுகிறார்கள். தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் திரை உலகில் பீஷ்மரை போன்றவர். தமிழ் படங்களை தெலுங்கு திரையுலகிற்கு எடுத்துச்சென்று விளம்பரப்படுத்தும் போது அவர் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டே இருப்பார். அவரை எனக்குத் தெரியும் என்பதிலேயே நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் துருக்கி நாட்டிற்கு சென்றிருந்தபோது அங்கும் டிஎஸ்பி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. இதுதான் அவருக்கு கிடைத்திருக்கும் புகழ். அவர் எப்போதும் உழைத்துக் கொண்டே இருப்பார். அவருடைய ஸ்டுடியோவுக்கு சென்றால்.. இசையை பற்றி மட்டுமே பேசிக் கொண்டே இருப்பார். அவர் இந்த நாட்டிற்கு சொந்தம். அவை எப்போதும் எனர்ஜியுடன் இருக்கிறார். இதற்காகவே நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். சாய் பல்லவி மிகவும் ஸ்பெஷல் ஆனவர். அவர் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தன் திறமையை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார். காதலிப்பதாகட்டும்.. அதில் காதலை கொட்டி தீர்ப்பார். இதனாலேயே இளைஞர்கள் எல்லாம் உங்கள் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். நடனம் சொல்லவே வேண்டாம். வலியை கடத்துவதாக இருந்தாலும் அதிலும் முத்திரை பதிக்கிறீர்கள். வயதிற்கு மீறிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அனுபவமும் வித்தியாசமாக இருக்கிறது. அமரன் படம் பார்த்துவிட்டு உங்களிடம் பேசியிருக்கிறேன். ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியின் தியாகம் என்ன? என்று பொதுமக்களுக்கு தெரியாது. அதை அமரன் படத்தில் நீங்கள் விவரித்திருந்த விதம் அவர்களின் வலியை எங்களுக்கு புரிய வைத்தது. இதற்காக நன்றி.
நாக சைதன்யா அவருடைய தாத்தா எனக்கு தெரியும். அவரைத் தொடர்ந்து நாகார்ஜுனாவை தெரியும். அவர் 'இதயத்தை திருடாதே' படத்தை பார்த்த பிறகு.. அவரைப் போல் டிரஸ் செய்து கொள்வது.. அதேபோல் ஓடுவது...என பல முயற்சிகளை பலரும் செய்தார்கள். ஆனால் அவர் செய்த ஸ்டைலில் யாராலும் செய்ய முடியவில்லை. அவரைப் போல் அழகாக பேசவும் தெரியாது. அவருடன் தெலுங்கு திரைப்படத்தில் பணியாற்றிருக்கிறேன். நான் அங்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்வார். அவ்வளவு அக்கறையுடன் பார்த்துக் கொள்வார். அன்பை பொழிவதில் தன்னிகரற்றவர். அவருடன் பணியாற்றி 10 வருடங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் தற்போது நான் என்ன படம் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்து வைத்திருப்பார். அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று சொல்வார். படம் பார்த்து பிடித்து விட்டால்.. உடனடியாக ட்வீட் செய்வார். இது போல் எனக்காக எப்போதும் அன்பு காட்டி வரும் அவருக்கு நான் திருப்பி என்ன செய்வதென்று தெரியவில்லை.
நாக சைதன்யாவை முதன் முதலில் திரையில் பார்த்த போது கூச்ச உணர்வு உள்ள ஒரு இளைஞரை அழுத்தம் கொடுத்து நடிக்க வைக்கிறார்களோ..! என தோன்றியது. ஆனால் அவர் முகத்தில் ஒரு அப்பாவித்தனம் தெரியும். அந்த அப்பாவித்தனத்தை தான் ஏராளமான பெண்கள் ரசிக்கிறார்கள். அவருடைய அப்பாவித்தனமும் பிடித்தது. அவருடைய அப்பாவையும் பிடித்தது. அவருடைய தாத்தாவையும் பிடித்தது. நாக சைதன்யா கடுமையாக உழைப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படத்தில் அவருடைய வளர்ச்சி தெரிகிறது. இந்தத் திரைப்படத்திற்காக ஒன்றரை ஆண்டு காலம் தன் உடலமைப்பையும் மாற்றி நடித்திருக்கிறார். உழைப்பு ஒரு போதும் வீண் போகாது. உங்களுடைய கடும் உழைப்புக்கு இந்த படம் சரியான பரிசை வழங்கும். இந்தப் படம் தமிழிலும் பெரிய வெற்றியை பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)