karthi speech in japan trailer and karthi 25 event

ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜப்பான். இப்படம் கார்த்தியின் 25வது படமாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவையும் கார்த்தி25 என இரண்டு திரையுலகப் பயணத்தையும் ஒரு சேரக் கொண்டாடும் வகையில் சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்ட விழா நடைபெற்றது.

Advertisment

இந்தநிகழ்வில் சூர்யா, விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, கே.எஸ். ரவிகுமார், தமன்னா, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர்கள் பா. ரஞ்சித், சிவா, லோகேஷ் கனகராஜ், பி.எஸ். மித்ரன், ஹெச். வினோத், உள்ளிட்ட பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் இந்த 20 வருடங்களில் கார்த்தியுடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர்கள், சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்த நிகழ்வில் கார்த்தி பேசுகையில், "நான் எதையும் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் இந்த தருணம் நான் சரியான பாதையில் தான் செல்கிறேன் என்கிற ஒரு பலமான தன்னம்பிக்கையைஎனக்கு கொடுத்திருக்கிறது. முதல் அன்பு என்பது நம் எல்லோருக்கும் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கிறது. அதன்பிறகு நண்பர்கள், பின்னர் மனைவியிடம் இருந்து.., ஆனால் அதை எல்லாம் விட ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பு எந்தவித நிபந்தனையும் இல்லாதது. இவர்கள் அன்பு அனைத்தையும் நான் எனது முதல் படத்திலேயே பெற்றுவிட்டேன். அவர்களுடைய அன்புதான் என்னை நீண்ட தூரம் ஓட வைக்கும் உந்து சக்தியாக இருக்கிறது.

இயக்குநர் மணிரத்னம் சாருக்கு நன்றி சொல்கிறேன். இந்த திரையுலகில் அவரைப் போன்ற ஒரு அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட நபரை நான் பார்த்ததே இல்லை.நடிப்பு பற்றி என்னவென்றே தெரியாத என்னைப் போன்ற ஒரு புதிய நபரான எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் அமீர் அண்ணா. என்னை முதன் முதலாக ஊக்கப்படுத்திய மனிதர் ஞானவேல் ராஜா தான். கைதி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட என்னுடைய படங்களின் சண்டைக் காட்சிகளில் எனக்கு தூணாக பின்னணியில் இருந்தவர் பாண்டியன் மாஸ்டர். சண்டைக் காட்சிகளின்போது ரிஸ்க்கான சூழ்நிலைகளில் அவர் கற்றுக் கொடுத்தது தான் என்னை பலமுறை காப்பாற்றி இருக்கிறது.

ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு நாட்களில் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு நன்றி. நேர்மறையின் ஒட்டுமொத்த உருவம் சிவா சார். பலரும் தாடி இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது என்று நினைத்தபோது பையா படத்தின் மூலம் என்னை வித்தியாசப்படுத்தி வெளிச்சம் போட்டுக் காட்டினார் இயக்குநர் லிங்குசாமி. என்னுடைய இசையமைப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஒப்பனை குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் வினோத் ரொம்பவே அரிதான மனிதர். சில வார்த்தைகள் மட்டும் பேசினாலும் தெளிவான சிந்தனை கொண்டவர். காஷ்மோரா போன்ற சிறந்த படத்தை கோகுல் எனக்காக கொடுத்திருக்கிறார். திரையரங்குகளில் அந்த படம் சரியாக போகாவிட்டாலும் கூட ஆன்லைனில் வெளியானபோது நல்ல வரவேற்பை பெற்றது” என்று கூறினார்

இந்த விழாவுக்கு வருகை தந்த சக நட்சத்திரங்கள் பற்றி அவ்வப்போது கார்த்தி பேசுகையில், “விஷாலின் தூண்டுதல் காரணமாகத்தான் நான் நடிகர் சங்கத்திற்குள் இழுத்து வரப்பட்டேன். அந்த வகையில் எனக்கு ஒரு நல்ல குடும்பம் கிடைத்தது. ஜெயம் ரவி பிறக்கும்போதே ஒரு ஹீரோ ஆகவே பிறந்தவர். ஆர்யா ஒரு நல்ல சிகிச்சையாளர். கூலான மனிதர். நல்ல அதிர்வுகளை ஏற்படுத்துவதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம். இந்த நிகழ்வில்தமன்னா கலந்து கொண்டது எனக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ். மும்பையில் இருந்து இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இங்கே வருவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை.

நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியபோது ஒரு குழுவாக மகதீரா படம் பார்ப்பதற்கு சென்றோம். அதுபோன்ற ஒரு நல்ல கதாபாத்திரத்திற்காக அவர் ஏங்கிக் கொண்டிருந்தார். ஆனால் சில வருடங்களுக்கு பிறகு பாகுபலி படத்தில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்திலேயே நடிக்கும் வாய்ப்பை பெற்றார். நாங்கள் மூன்று படங்களில் இணைந்து நடித்திருக்கிறோம்.மூன்றுமே பிளாக்பஸ்டர் வெற்றி. இயக்குநர் ரஞ்சித்தை பொறுத்தவரை அவர் என்னிடம் மெட்ராஸ் படத்தின் ஸ்கிரிப்ட்டை படிக்க கொடுத்தபோது அதில் நான் ஒரு பாகமாக இருக்கவில்லை. ஆனால் அந்த ஸ்கிரிப்ட்டை படித்தவுடன் அது ஈரானிய படங்களைப் போல சர்வதேச தரத்தில் இருந்தது” என்றார்.