சூர்யா நடத்தி வரும் அகரம் அறக்கட்டளை 15வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை முன்னிட்டு பிரம்மாண்ட விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லுரியில் நடைபெற்றது. இதில் சூர்யா, ஜோதிகா மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர். மேலும் கமல்ஹாசன், வெற்றிமாறன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கார்த்தி பேசுகையில், “நாம் தொடர்ந்து சோசியல் மீடியாவில், யாருக்கும் யாருக்குமே அக்கறை கிடையாது. எல்லாருக்கும் எல்லாரையும் பார்த்து பொறாமை, ஒரு சுயநலமாக இருக்கும் சமூகத்தில் தான் நாம் இருக்கோம் என பார்த்து கொண்டிருந்தோம். ஆனால் இந்த மேடையை விட ஒரு அழகான மேடை இருக்க முடியாது என நினைக்கிறேன். ஏனென்றால் எங்கையோ இருப்பவர்கள், இன்னொருத்தர் நலலாயிருக்க வேண்டும் எனச் சொல்லி எதையுமே எதிர்பார்க்காமல் ஆரம்பித்தது தான் அகரம். அப்படி பார்த்தால் நாம் பெரிய அன்பு சார்ந்த உலகம் என இப்போது உணர்கிறேன். ஒரு பெரிய இருட்டான குழியில் இருந்து குழந்தைகள், கையை நீட்டி, அண்ணா என்னை காப்பாற்றுங்கள் என சொல்லும் வார்த்தைகள் தான் எனக்கு காதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு வருஷமும் அகரத்தில் எத்தனை அப்ளிக்கேஷன் வந்திருக்கிறது என்று கேட்டுக் கொண்டே இருப்பேன். இதுவரை 95,000 அப்ளிக்கேஷன் வந்திருக்கிறது. அதில் 20,000 பேர் வீட்டிற்கு சென்று தன்னார்வலர்கள் பார்த்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதில் 1800 குழந்தைகளைத் தான் நாம் காப்பாற்ற முடிந்திருக்கிறது. மீதமுள்ள குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும்.
இத்தனை வருஷத்தில் அகரத்தில் படித்த குழந்தைகள், அவர்களது குடும்பத்தினை பார்க்கும் அழகை நினைத்து பார்க்கிறேன். அக் குழந்தையின் அப்பா, அம்மா சந்தோஷத்தை எந்தளவு வைத்தும் ஈடுபடுத்த முடியாது. கல்வி மட்டும் தான் அதற்கு உதவியிருக்கிறது. இந்த நேரத்தில் தன்னார்வலர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர்களின் தியாகம் முக்கியமானது. அதே சமயம் வழிகாட்டியாக இருப்பவர்களுக்கும் நன்றி. அண்ணா(சூர்யா), பசங்க படிக்க பணம் தேவைப்படும் என யோசிக்கும் போதெல்லாம், அண்ணி(ஜோதிகா) பணத்தை வைத்தா ஆரம்பித்தோம், அன்பை வைத்துதானே ஆரம்பித்தோம், அதெல்லாம் தானாக வரும் என சொல்வார். அதே போல் அப்பா, அம்மா என அனைவரும் தன்னால் முடிந்ததை செய்வார்கள். அதனால் தொடர்ந்து நல்லதை செய்வோம், சுற்றி இருப்பவர்களும் நல்லதையேதான் செய்வார்கள் என நம்புவோம். இந்த பாதை தொடர வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்கு நிறைய பேர் கை கொடுக்க வேண்டும்.
அண்ணாவின் குழந்தைகள் இரண்டு பேரும் மாதம் ரூ.300 கொடுத்து வருகிறார்கள். அதனால் அடுத்தவர்கள் நலலாயிருக்க வேண்டும் என நினைப்பவர்கள் தயவு செய்து அகரத்தோடு கை கோருங்கள். மாணவர்கள் அனைவரும் நிறைய சவால்களை தாண்டி வந்திருக்கிறீர்கள். இன்னமும் வாழ்க்கையில் சவால் இருக்கிறது. அதையெல்லாம் தாண்டி போக முடியும் என்ற தைரியத்தை வளர்த்து கொள்ளுங்கள். எதை சிந்திக்கிறீர்கள், எதை பார்க்கிறீர்கள் என்பதில் மட்டும் கவனமாக இருங்கள். ஏனென்றால் அதுதான் உங்களின் எதிர்காலமாக இருக்கப் போகிறது. இன்றைக்கு நீங்க இருக்கிற இடம், இதற்கு முன்னாடி நீ ஆசைப்பட்டதாக இருக்கலாம். ஆனால் நீங்கள் போக வேண்டிய இடத்தை இப்போது இருக்கும் இடத்தில் இருந்து சிந்திக்க வேண்டும். அதனால் மனதையும் எண்ணங்களையும் சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். உங்கள் கனவுகள் எல்லாம் நனவாகட்டும்” என்றார்.