Advertisment

"ஆரம்பத்தில் ‘சர்தார்’ படம் வந்திருந்தால் நிச்சயம் நடித்திருக்க மாட்டேன்" - நடிகர் கார்த்தி 

karthi share sardar movie experience

Advertisment

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சர்தார்'. 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவில்லை என்ற சூழ்நிலையில் நடிகர் கார்த்தி சர்தார் படம் குறித்துப் பகிர்ந்துகொண்டுள்ளார். அவை பின்வருமாறு....

"இது உளவாளிகள் பற்றிய கதை, தமிழ் சினிமாவில் நாம் அதிகம் பார்த்ததில்லை. எனக்கு நினைவில் இருப்பது விக்ரம் படம் மட்டும்தான். ஜேம்ஸ்பாண்ட் மாதிரியான மேல்நாட்டு படங்களின் பாதிப்பில்தான் உளவாளிகளின் பற்றிய கதை இருந்திருக்கிறது. ஆனால், நமது ஊரில் நமது மண்ணில் ஒருவன் உளவாளியாக இருந்தால், அவன் எப்படி தோன்றுவான்? எப்படி செயல்படுவான்? எப்படி அணுகுவான்? என்பதை நாம் வெளிப்படுத்தியது இல்லை என்று தோன்றியது. ஆகையால் மித்ரன் கதையை கூறும்போது எனக்கு பிடித்திருந்தது. அந்த உளவாளி என்ன வழக்கிற்காக உழைக்கிறான் என்பதை கேட்கும்போது மிரட்டலாக இருந்தது.

'காஷ்மோரா' படத்தை தவிர வேறு எந்த படத்திற்கும் அதிக வேடங்கள் போட்டதில்லை. அதன் பிறகு, நீங்கள் டிரைலரில் பார்த்த அனைத்து பார்வைகளும் இந்த படத்திற்கு தேவையும், அவசியமும் ஏற்பட்டது. ஆனால், சினிமாத்தனம் இல்லாமல் இந்த ஊரில் இருக்கும் ஒருவன் வேஷம் போடுவதாக இருந்தால் எப்படி சிந்திப்பானோ அதை வைத்து வேஷம் போட்டதை நான் புதுமையாக பார்க்கிறேன். ஒவ்வொரு முறை மேக்கப் போடும்போது வயதான ஆள் மாதிரி இல்லாமல், வயதான ஆளாகவே காட்டுவதற்கு சவாலாக இருந்தது. இதற்கு முன் எந்த படத்திலும் இப்படி மெனக்கெடவில்லை. அதே போல், கதைப்படி இரண்டு நாளுக்கு மேல் ஒரு ஊரில் படப்பிடிப்பு நடக்காது. ஒவ்வொரு ஊருக்கும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்காக குலுமணாலி போக வேண்டும். பங்களாதேஷை தனியாக உருவாக்க வேண்டியிருந்தது. அதேபோல், 80 களை மறு உருவாக்கம் செய்ய வேண்டும். அந்த காலத்திலிருந்த டிரான்சிஸ்டர், கேமரா போன்றவைகளை தேடி எடுக்க நேர்ந்தது. இல்லையென்றால், அமேசான் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் இரண்டிலும் வரும் மேற்கத்திய படங்களை மேற்கோள் காட்டிவிடுவார்கள். ஆகையால், ஒவ்வொரு விஷயங்களிலும் ஆராய்ச்சி செய்து தான் எடுத்திருக்கிறோம்.

Advertisment

மேலும், கலை, ஒளிப்பதிவு என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தோம். திரைக்கதைக்கு மட்டுமே 2 வருடங்கள் ஆனது. உளவாளியை பொருத்தவரை அவன் செயலில் தோல்வி ஏற்பட்டால் மட்டுமே அடையாளப்படுத்தப்படுவான். இல்லை என்றால், மக்கள் யார் என்று அறியாமல் மக்களுக்காக பணிபுரிந்து கொண்டிருப்பான். இதை மேலோட்டமாக கூறாமல் உணர்வுப்பூர்வமாகக் கூறியிருப்பதே இப்படத்தின் கதை.

தீபாவளியன்று படம் பார்த்தால் தான் பண்டிகையை முழுமை பெறும். அப்படிப்பட்ட தீபாவளிக்கு படம் வெளியாவது எல்லா நடிகர்களுக்கும் போனஸ் தான். இந்த படத்துடன் ப்ரின்ஸ் படம் வருவதும் மகிழ்ச்சியாக உள்ளது. இரண்டு படங்களும் இருவேறு கதை களத்தில் உள்ளதால் மக்களுக்கும் தீபாவளியன்று இரண்டு படங்கள் பார்த்து திருப்தியையும் கொடுக்கும். அதேபோல் ப்ரின்ஸ் படத்தின் ட்ரைலர் பார்த்தேன். சிவாவின் ரசிகர்களுக்கு ஏற்றவாறு நன்றாக இருக்கிறது.

ஜிவி பிரகாஷ் இந்த படம் என்னுடைய படம் என்று முன்பே கூறி விட்டார். ஏனென்றால் திரில்லர் படத்தில் மியூசிக் தான் ஆதிக்கம் செலுத்தும். அவர் இசையில் இப்படத்திற்காக ஒரு பாடலை பாடியிருக்கிறேன். படத்தின் தொடக்கத்தில் வரும் தீம் இசையை சர்வதேச அளவில் இசையமைத்திருந்தார் ஜிவி பிரகாஷ். பல இடங்களில் படப்பிடிப்பின்போது அவருடைய இசையை போட்டு தான் படப்பிடிப்பு நடத்தினோம். அதேபோல் பாடல்களும் கதையுடனேயே பயணிக்கும்.

இப்படம் ஒரு முறை பார்க்கும் படமாக இருக்காது. பொதுவாக த்ரில்லர் படத்தில் முதல் முறை பார்க்கும் போது சஸ்பென்ஸ் உடைந்து விட்டால் அடுத்த முறை பார்க்கும் போது சுவாரஸ்யம் இருக்காது. ஆனால், இந்த படத்தில் அடுத்த முறை பார்க்கும்போதும் சுவாரசியம் இருக்கும் வகையில் பல விஷயங்களை இயக்குநர் வைத்திருக்கிறார். பார்வையாளனாக கதை கேட்கும்போதே இந்த சஸ்பென்ஸ் கதைக்குள் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று வியந்தேன். நடிகர் முனிஸ்காந்த் உடன் முதன்முறையாக நடிக்கிறேன். அண்ணன் இப்படத்தைப் பார்த்துவிட்டு, இதில் உனக்கு பல வேடங்கள் இருந்தாலும் எல்லாமே கதைக்கு ஏற்றவாறு பொருத்தமாக இருக்கிறது. அதே போல, ஒவ்வொரு வேடமும் உண்மையாக இருக்கிறது என்றார்.

உளவாளியாக நடிப்பேன் என்று நான் நினைக்கவில்லை. இதுவே நடிக்க வந்த ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரம் வந்திருந்தால் நிச்சயம் ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன். ஏன் என்றால் எவ்வளவு பெரிய ஒரு கதாபாத்திரத்தை சுமக்கும் அளவுக்கு அப்போது அனுபவம் இல்லை. அதேபோல அனுபவம் இருக்கும் போதுதான் அதற்கு ஏற்று கதாபாத்திரமும் வரும். தேசிய விருது வாங்கும் அளவிற்கு கதாபாத்திரம் இன்னும் வரவில்லை. அது வரும்போது நிச்சயம் தேர்ந்தெடுத்து நடிப்பேன். அதுவரை எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். இந்தப் படத்தில் முதன்முறையாக வயதான தோற்றத்தில் நடிக்கிறேன். அந்த தோற்றம் உண்மையாக வரவேண்டும் என்று நினைக்கிறேன். மேலும், என் குடும்பத்திலேயே தயாரிப்பாளர்கள் இருப்பதால் எனக்கு படம் தயாரிப்பதில் ஆர்வம் இல்லை. நடிப்புக்கேற்ற சம்பளம் வந்தால் போதும்.

இதற்கு முன் உளவாளியாக நடித்தவர்கள் அந்த கதாபாத்திரத்தில் எப்படி நடித்தார்கள்? முக்கியமான காட்சிகள் வரும் போது தங்களுடைய தீவிரத்தை எப்படி காட்டினார்கள்? என்று பார்த்தோம். அதில் எந்த சாயலும் இந்த படத்தில் வந்துவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். மித்ரனும் திரைக்கதையில் தெளிவாக இருந்தார். வயதான தோற்றத்தில் நடிக்கும் போது அனுபவமும் வேண்டும், அதே சமயம் சண்டையும் போட வேண்டும். இரண்டு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது.

மேலும், சர்தார் வேடத்திற்காக பல அமர்வுகளில் முயற்சி செய்தோம். ஒரே காட்சியில் பல பார்வைகளை கொண்டு வர வேண்டும் என்பது சவாலாக இருந்தது. அதற்காக நிறைய பயிற்சி செய்தேன். மித்ரனும் பேப்பரில் இருக்கும் காட்சிகளில் இன்னும் சிறப்பாக மாற்றுவதற்கு நானோ அல்லது உதவி இயக்குநர்களோ ஆலோசனை கூறினால், உடனே ஏற்றுக் கொண்டு செய்வார்.

ஒரு இயக்குநருடன் கதை கேட்கும் போது ஒரு பார்வையாளராகத் தான் கேட்பேன். ஏனென்றால், ஆறு மாத காலம் இந்த கதாபாத்திரத்தோடு தான் நான் பயணம் செய்ய வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் எனக்கு அந்த கதாபாத்திரம் சவாலாகவும், வித்தியாசமாகவும் இருந்தால் தான் ஆர்வமாக நடிக்க முடியும். புது இயக்குநரிடம் கதை கேட்கும் போது, அவர் கதை கூறும் விதத்திலேயே எப்படி காட்சிப்படுத்துவார் என்று ஓரளவுக்கு தெரிந்துவிடும். ஆகையால், எனக்கு கதையைத் தேர்ந்தெடுப்பதில் எந்த குழப்பமும் கிடையாது.

தற்போது, கைதி 2 படம் லைனப்பில் இருக்கிறது ராஜுமுருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறேன். அந்த படத்தில் இருக்கும் கதாபாத்திரத்தை மற்ற நடிகர்கள் தேர்ந்தெடுத்து நடிப்பார்களா என்று தெரியாது. ஏனென்றால், அது சிக்கலான பாத்திரம்” என்றார்.

actor karthi Sardar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe