Skip to main content

“இந்த சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்?” -கார்த்தி கேள்வி

Published on 29/07/2020 | Edited on 29/07/2020

 

 

மத்திய அரசு வெளியிட்டுள்ள 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு விதிகள் 2020' வரைவு குறித்த விழிப்புணர்வை பலரும் சமூக ஊடகத்தை பயன்படுத்தி ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி தற்போது வரைவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

 

"நாடென்ப நாடா வளத்தன நடல்ல
நாட வளந்தரு நாடு”

-குறள் 739

 

"முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல"

 

மேற்கண்ட குறளுக்கு ஏற்ப பல வளங்களை உடைய மிக சிறந்த நாடாக உலக நாடுகள் போற்றும் நம் இந்தியாவில், இப்பொழுது உள்ள சுற்றுச்சூழல் சட்டங்கள், நம் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போதுமானதாக இல்லை. ஆனால், தற்பொழுது மத்திய அரசு வெளியிட்டிருக்கும் 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020' வரைவு (Environmental Impact Assessment - EIA 2020) நம் இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது.

 

மலைகளும், ஆறுகளும் பல்வகை உயிரினங்களுமே நம் வாழ்விற்கு ஆதாரமானவை. மரங்களையும், விவசாய நிலங்களையும் அழித்து நெடுஞ்சாலைகள் போடுவது, இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலைகள் அமைப்பதும் நிச்சயம் வளர்ச்சி அல்ல. இயற்கை வளங்களை அழித்து, அதை வளர்ச்சியின் அடையாளமாக காட்டுவது வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் முயற்சி. அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது.

 

இந்த வரைவு அறிக்கையில், ‘பல முக்கிய திட்டங்களை மக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம்’ என்கிற ஒரு சரத்தே, நம் உள்ளத்தில் மிகப்பெரிய அவநம்பிக்கையையும், அச்சத்தையும் உருவாக்குகிறது. நம்முடைய சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களையும், அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் மக்களாகிய நாம் பேசவே முடியாது என்பது எந்த வகையில் நியாயமான ஒரு சட்டமாக இருக்கும்?

 

மேலும் தொழிற்சாலைகள் வகைப்பாடு மாற்றம், பழைய விதி மீறல்களுக்கு பிந்தைய உண்மை (Post Facts) மக்கள் கருத்து பதிவுக்கான நாட்களைக் குறைப்பது போன்ற சரத்துகளும் நம்மை அச்சுறுத்துகின்றன. குமரி முதல் காஷ்மீர் வரையிலுமான சட்டம் என்ற போதும், இந்த வரைவறிக்கை வெறும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது. தமது தாய்மொழி மட்டுமே அறிந்த கோடிக்கணக்கான மக்கள் இந்த கொள்கைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?

 

நாட்டிற்கான முன்னேற்றங்கள் தேவை என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், கோவிட் - 19 எனும் அரக்க பிடியில் நாம் அனைவரும் சிக்கி, மீள போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நம்முடைய வாழ்வாதாரத்தையும், முக்கியமாக நமது வருங்கால சந்ததியினரின் வாழ்வையும் நிர்ணயிக்கக்கூடிய சக்தியுள்ள இந்த சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்?

 

எனவே, இந்த வரைவு அறிக்கையின் சாதக, பாதக அம்சங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்து, பொது விவாதமாக்கி அதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நமக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பை நாம் நிச்சயமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். eia2020-moefcc@gov.in என்கிற மின்னஞ்சல் முகவரியில், ஆகஸ்ட் 11, 2020 தேதிக்குள் நம் கருத்துகளைப் பதிவு செய்வோம்.

 

அறிஞர்கள், ஆய்வாளர்கள் கருத்துகளுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டு வர வேண்டுமென மக்களில் ஒருவனாகக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

கடைக்குட்டி சிங்கம் படத்தில் விவசாயியாக நடித்த பின், விவசாயத்தில் ஈடுபாடு ஏற்பட்டு, முழுமையாக அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் கார்த்தி. 'உழவன் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூஜையுடன் பணிகளைத் தொடங்கிய சங்க நிர்வாகிகள்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nadigar sangam building works start again with pooja

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்த பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

nadigar sangam building works start again with pooja

இந்த நிலையில் இன்று சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் தொடங்கியது. பூஜை நடத்தி பணிகளை தொடங்கினார்கள் சங்க நிர்வாகிகள். இந்த பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story

மீண்டும் பயணத்திற்கு அழைத்துப் போகும் கார்த்தி

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
karthi tamanna starring lingusamy direction paiya re rlease update

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் 'பையா'. லிங்குசாமி இயக்கி தயாரித்த இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்றும் பல யுவன் ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இப்படப் பாடல்கள் இடம்பெற்று வருகிறது. 

இப்படத்தின் வெற்றி கார்த்தி மற்றும் தமன்னாவின் சினிமா கரியரில் முக்கியமான திருப்பமாக அமைந்தது. மேலும் இருவரின் காம்போ வெற்றி கூட்டணி என பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க லிங்குசாமி கடந்த ஆண்டு முயற்சி எடுத்ததாக தகவல் வெளியானது. மேலும் ஆர்யா நடிக்கவுள்ளதாகவும் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஜான்வி கபூர் எந்த தமிழ் படத்திலும் கமிட்டாகவில்லை என அவரது தந்தை மற்றும் தயாரிப்பாளரான போனி கபூர் தெரிவித்திருந்தார். பின்பு பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்பட்டது. தொடர்ந்து ஹீரோவாக அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடிப்பதாக தகவல்கள் உலா வந்தது.  

karthi tamanna starring lingusamy direction paiya re rlease update

இப்படி பையா 2 படம் பற்றி தொடர்ந்து தகவல் வெளியாகி வந்த நிலையில் அண்மைக் காலமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த சூழலில் பையா படம் வெளியாகி 14 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதையொட்டி போஸ்டரை வெளியிட்ட படக்குழு பையா பட ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 12ஆம் தேதி ரீ ரிலீஸாவதாக அறிவித்துள்ளது. சமீப காலமாக ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருவதால், ஹிட்டடித்த நிறைய பழைய படங்கள் ரீ ரிலிஸாகி வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வரிசையில் தற்போது பையாவும் இணைந்துள்ளது.

இப்படம் வெளியான சமயத்தில் பயணத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்தது ரசிக்கும்படியாக அமைந்ததாக ரசிகர்கள் கூறிவந்தனர். இந்த நிலையில் மீண்டும் அந்தப் பயணத்திற்கு தயாராகி வருவதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.