தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி, தற்போது சர்தார் 2, மார்ஷல் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இவரது ரசிகர்கள் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த மே 25 ஆம் தேதி கார்த்தியின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க ரசிகர்கள் பல்வேறு அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்தார்கள். சென்னையில் உள்ள ரசிகர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்தார்கள். இவ்வாறு இரத்த தானம் செய்தவர்களில் 250 ரசிகர்களை அழைத்து கார்த்தி நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு சென்னை தியாகராய நகரில் நடந்த நிலையில், இரத்த தானம் செய்தவர்களுக்கு கார்த்தி சான்றிதழ் வழங்கி, விருந்தளித்தார். அதன்பின் பேசிய அவர், “பிறந்த நாளில் உங்களை பார்க்க முடியாமல் போய்விட்டது. நான் ஊரில் இல்லை. ஆனால் இவ்வளவு பேர் இரத்தம் கொடுத்ததை நினைத்து சந்தோஷமாக இருந்தது. என் நண்பர் வைத்திருக்கும் வாட்ஸ்அப் க்ரூப்பில் இரத்தம் கிடைக்கவில்லை என்று சொல்லி கொண்டே இருப்பார்கள். அதை கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. இன்றும் இரத்தம் கிடைப்பது பிரச்சினையாக இருக்கும் நிலையில், நீங்கள் அனைவரும் இரத்தம் கொடுத்து இருப்பது பல அம்மாக்கள், குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சந்தோஷப்படுத்தி இருக்கிறது. இதற்கு உங்கள் அனைவருக்கும் மனதில் இருந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன். இரத்த தானம் கிடைத்த பிறகு அவங்க உயிருக்கு பயம் இல்லை என்ற நிலையில் முகத்தில் தெரியும் சிரிப்பு விலை மதிப்பற்றது.
உங்களை பார்க்கும் போது மறுபடியும் தோன்றுவது, உடன் பிறந்த அண்ணனோ, தம்பியோ இல்லை ஆனால் நீங்கள் என் மீது காட்டும் அன்பிற்கு காலம் முழுக்க நன்றி சொன்னாலும் போதாது. காலத்திற்கும் உழைத்து கொண்டு இருக்க வேண்டும். நீங்கள் பெருமை கொள்ளும் அளவுக்கு விஷயங்களை செய்து கொண்டிருக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். இந்த அன்பு கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்கள் ஒவ்வொருத்தருக்கும் லவ் யூ என்று தான் சொல்ல வேண்டும்” என்றார்.