karthi Arvind Swami Meiyazhagan  trailer released

கார்த்தி மற்றும் அர்விந்த் சுவாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் மெய்யழகன். இப்படத்தை சூர்யா - ஜோதிகா ஆகியோர் தயாரித்திருக்க 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்திருக்க ராஜ்கிரண், ஜெயபிரகாஷ், தேவதர்சினி சுகுமாரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்த நிலையில், படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரில், தஞ்சாவூருக்கு தயக்கத்தில் புறப்படும் அர்விந்த் சுவாமி, அங்கு சென்று கார்த்தியை சந்தித்து அவருடன் பயணிக்கிறார். அப்போது இருவருக்குமான உரையாடல்களை கலகலப்பாக காட்சிப்படுத்தியுள்ளனர். அதில், பாடல், நடனம், காமெடி என அனைத்தும் இடம் பெறுகிறது. இதனிடையே கார்த்திக்கு அர்விந்த் சுவாமியை எந்த அளவிற்கு பிடிக்கும் என ஸ்ரீ திவ்யா ஒருவரிடம் சொல்கிறார்.

Advertisment

அதைத்தொடர்ந்து ‘அத்தான் ஆர் யூ ஹாப்பி... உங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா?’ என கார்த்தி அர்விந்த் சுவாமியிடம் கேட்க, பின்பு எமோஷனலான சில காட்சிகள் வருகிறது. இறுதியில் ‘எல்லாம் இறந்த காலமா அத்தான்?.. நம்ம கடந்து வந்த காலம்... பொற்காலம்’ என கார்த்தி உருக்கமுடன் பேசும் காட்சியுடன் ட்ரைலர் முடிவடைகிறது. இந்த ட்ரைலர் தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.