ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ அறிமுக விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் ரவி மோகன், அவரது தோழி பாடகி கெனிஷா, பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, னெலிலியா என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

Advertisment

நிகழ்வில் மேடையில் பேசிய கார்த்தி, “நான் சினிமாவுக்கு வர வேண்டும் என ஆசைப்படும் போது, ரவி அண்ணா ஸ்டண்ட் கிளாசில் இருப்பார். நாங்களெல்லாம் ஒரு 3 அடி குதித்தால் ரவி, 10 அடி குதிப்பார். அதையெல்லாம் பார்க்கும் போது பயமாக இருக்கும். கிளாஸ் முடிஞ்ச பின்பு ஜூஸ் வாங்கிக்கொடுப்பார். நாங்க காசு கொடுத்தாலும் சும்மா இருங்கடா சின்ன பசங்களான்னு சொல்வார். அப்படித்தான் எனக்கும் ரவி அண்ணாவுக்கும் பழக்கம். கொஞ்ச நாள் கழித்து தான் தெரிந்தது, அவர் என்னை விட சின்ன பையன் என்று. அதற்குப் பிறகு தான் ரவின்னு பேச ஆரம்பிச்சோம். அவருடைய எல்லா படங்களையும் நான் பார்த்துவிட்டு ஃபோன் செய்வேன். பொன்னியின் செல்வன் இளவரசாரக அவர், சிறப்பாக இருந்தார். ஒரு இளவரசராக நடிக்கக்கூடிய எல்லா லக்‌ஷனமும் அவருக்கு இருந்தது. 

எனக்கு ரவியிடம் ரொம்ப பிடிச்ச விஷயம், மனசாரக் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காத ஒரு ஆள். அதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. அவர் இயக்கத்தில் நானும் அவரும் நடிப்பதாக ஏற்கனவே பேசியிருந்தோம். அதற்கான கதையும் என்னிடம் சொன்னார். ரவியுடைய இன்னொரு முகம் நமக்கு தெரியாது. அவருக்கு ஜிம் கேரி(அமெரிக்க நடிகர் மற்றும் காமெடி கலைஞர்) அளவுக்கு ஒரு முகம் இருக்கிறது. அதை இன்னும் அவரது அண்ணன் ராஜாக்கூட திரையில் காட்டவில்லை. அதை யோகி பாபுவுடன் அவர் பண்ணும் படத்தில் இருக்கலாம் என நினைக்கிறேன். அவர் எதையெல்லாம் காட்டவில்லையோ யோகி பாபு மூலம் காட்டுவார் என நம்புகிறேன். ரவி மோகனுக்கு சினிமா பற்றி எல்லாமுமே தெரியும். அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார். இதனிடையே ரவி மோகன் தயாரிக்கும் முதல் படமான ‘ப்ரோ கோட்’ படம் தொடர்பாக ஒரு முன்னோட்ட வீடியோ மேடையில் உள்ள பெரிய திரையில் திரையிடப்பட்டதாக தெரிகிறது. அதை பார்த்த கார்த்தி, “இந்த படத்துக்கு பொண்டாட்டிய கூட்டிட்டு போகக்கூடாதுன்னு தெரியுது. அப்படி கூட்டிட்டு போனால் நல்லா அடி விழும்” என சிரித்து கொண்டே கமெண்ட் அடித்தார்.

இதற்கு முன்னதாக அவர் மேடைக்கு கீழ் நிகழ்விடத்தில் உட்காந்திருக்கும் போது, ரவி மோகன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தயாரிப்பாளர்களுடைய கஷ்டம் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் தான் தெரியும். அதனால் தான் அந்த பகம் நான் போகவில்லை. ரஜினி சார் கூட தயாரிப்பு நிறுவனம் வேண்டாம் என அட்வைஸ் பண்ணார். ஆனால் ரவி மோகன், நீண்ட நாட்கள் திட்டம் போட்டு இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதை இவ்ளோ பிரம்மாண்டமாக நடத்துவார் என நினைக்கவில்லை. அவர் ஏற்கனவே தான் யார் என நிரூபித்திருக்கிறார். அது இன்னும் பெரிதாகத்தான் வளரும்” என்றார்.