தேவ் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் படம் கைதி. இப்படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. எஸ்.ஆர். பிரபு சார்பில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கார்த்தியுடன் அவரது நெருங்கிய நண்பர்களான நரேனும், ரமணா நடித்திருக்கின்றனர்.

தீபாவளி ரிலீஸுக்கு தயாரகியிருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட கார்த்தி தனது நண்பர்களான நரேன் மற்றும் ரமணா குறித்தும் பேசினார்.

அதில், “ எந்த படத்திலும் இல்லாமல் இந்த படத்தில்தான் முதன் முறையாக என்னுடைய நண்பர்களை அழைத்து நடிக்க வைத்தேன். நரேன் எனக்கு பல வருடங்களாக நண்பர். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அவர்க்கு எப்போது வேண்டுமானாலும் போன் செய்து பேச முடியும். அது வாழ்க்கையில் நடக்கின்ற விஷயமாக இருக்கலாம், இன்னொருவருடன் ஒப்பிட்டு பார்க்ககூடிய விஷயமாக இருக்கலாம், நான் எடுத்த முடிவுகள் சரியா தவறா என்பதை கூட நரேனிடம் ஃப்ரீயாக பேசுவேன். அவரும் அதுபோலதான் என்னிடம் சகஜமாக பழகக்கூடியவர். அப்படிப்பட்டவர், அதனால்தான் அவருக்கு போன் செய்து இந்த படம் நீங்க பண்ணுங்க பிரதர். இது உங்களுக்கு ஒரு நல்ல படமாக இருக்கும் என்றேன். அவரும் உடனடியாக எதையும் கேட்காமல் தேதிகளை இந்த படத்திற்காக ஒதுக்கி நடிக்க வந்தார்.
அதைபோலதான் ரமணாவும் நானும் சேர்ந்து வேறு எதாவதுதான் பண்ணிட்டு இருப்போம். ஆனால், இந்த படத்தில் அவருக்கு போன் செய்து நடிக்க வா என்றும் உரிமையுடன் அழைத்தேன். அவரும் நடிக்க வந்துவிட்டார். அந்த நட்பிற்கு நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கைதி படத்தில் சாம் சி.எஸ் இசையமைப்பாளராகவும், சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராகவும், அன்பறிவ் சண்டை பயிற்சியாளர்களாகவும், பிலோமின் ராஜ் எடிட்டராகவும் பணிபுரிந்துள்ளனர். ட்ரைலர் வெளியான சிறிது நேரத்திலேயே ட்ரெண்டாகி தற்போது வைரலாகி வருகிறது.