கார்த்தி தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. மேலும் நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்படங்களை அடுத்து டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பட அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையிலும் எந்த ஒரு அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாமல் இருந்து வந்தது. இடையில் ராமேஸ்வரம் பேக்ட்ராப்பில் 1960களில் நடக்கும் ஒரு கேங்ஸ்டர் படமாக இப்படம் உருவாகவுள்ளதாக உள்ளிட்ட சில தகவல்கள் மட்டும் வெளியாகி இருந்தது. 

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் பணிகள் இன்று துவங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. மேலும் படத்திற்கு தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது. ‘மார்ஷல்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் போஸ்டரில் முகம் மறைக்கப்பட்டு டீ-சர்ட்டுடன் கைக்கட்டிக் கொண்டு நிற்கும்படி ஒரு ஆள் இடம்பெற்றுள்ளார். வித்தியாசமாக அமைந்துள்ள இப்போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ் மற்றும் பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் 1960-களின் ராமேஸ்வரத்தை மீண்டும் உருவாக்கும் விரிவான செட்கள் இடம்பெற இருப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment