தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் சரோஜா தேவி(87). தமிழில் 70-களின் முன்னணி நடிகராக வலம் வந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார். பின்பு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். கடைசியாக சூர்யா நடிப்பில் 2009ஆம் ஆண்டு வெளியான ஆதவன் படத்தில் நடித்திருந்தார்.
திரைத்துறையில் 7 தசாப்தங்களாக பயணித்து மூத்த நடிகையாக வலம் வந்த இவர் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வாங்கியுள்ளார். இவர் உடல் நலக்குறைவால் கடந்த ஜூலை மாதம் காலமானார். இவரது மறைவு இந்திய திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து சினிமாவில் இவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவருக்கு கர்நாடக ரத்னா விருது சமீபத்தில் அரசு அறிவித்தது.
இந்த நிலையில் கர்நாடக அரசு மேலும் ஒரு அறிவிப்பை சரோஜா தேவி தொடர்பாக அறிவித்துள்ளது. ‘அபிநய சரஸ்வதி பி சரோஜா தேவி விருது’ என்ற அவரது பெயரில் ஆண்டுதோறும் ஒரு விருது வழங்கவுள்ளதாக தெரிவித்து கன்னட சினிமாவில் 25 ஆண்டுகள் சேவையாற்றிய பெண்களுக்கு இந்து விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.