karnataka deputy cm shivakumar about thug life issue

மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன். கமலின் ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசிய கமலின் கருத்துக்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அம்மாநில முதலமைச்சர் முதல் எதிர் கட்சி தொடங்கி பல்வேறு கன்னட அமைப்புகள் போர் கொடி தூக்கின.

மேலும் கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என்றும் எச்சரிக்கைகள் விடுத்தன. ஆனால் கமல் திட்டவட்டமாக மன்னிப்பு கேட்கமுடியாது என சொல்லிவிட்டார். இருந்தாலும் அங்கு எதிர்ப்பு குரல்கள் ஓய்ந்தபாடில்லை. கமலுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு உருவபொம்மையும் எரிக்கப்பட்டது. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கன்னட அமைப்புகள் கூறிய எச்சரிக்கையை வலியுறுத்தியது. இதனால் தக் லைஃப் படம் கர்நாடாகவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனிடையே படத்தை எந்த தடையும் இல்லாமல் திரையிடவும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கமல் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

karnataka deputy cm shivakumar about thug life issue

Advertisment

இதனிடையே இந்த விவகாரம் குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த விவகாரத்தை அரசியல் பிரச்சனையாக மாற்ற வேண்டாம். நாங்கள் அண்டை மாநிலத்தவர்கள். இருவரும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். வாழவும் வேண்டும். எங்கள் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு செல்கிறது, தமிழக மக்கள் இங்கு வருகிறார்கள். நாங்கள் எதிரிகள் இல்ல. நண்பர்கள். இந்த பிரச்சனை தொடர்பாக நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. காரணம் இந்த பிரச்சனையின் பின்னணி தெரியாது” என்றார்.