karnataka cm siddaramaiah condemns to kamal

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படக்குழுவினர் புரொமோட் செய்யும் பணிகளில் கடந்த சில வாரங்களாக படு பிஸியாக இருக்கின்றனர்.

Advertisment

அந்த வகையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கன்னட முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார் பங்கேற்றார். இவர் குறித்து மேடையில் பேசிய கமல், “கன்னடத்தில் இருந்து இங்கு வந்த சிவ ராஜ்குமார், என் மகனாகவும் ரசிகனாகவும் உங்கள் பிரதிநிதியாகவும் வந்திருக்கிறார்” என்றார். பின்பு அவரது தந்தை ராஜ்குமார் குறித்து தனது அனுபவங்களை குறிப்பிட்டு, சிவ ராஜ்குமாரை பார்த்து, “இவர் அந்த ஊரில் இருக்கும் என் குடும்பம். அதனால் தான் என் பேச்சை ஆரம்பிக்கும் போது, உயிரே, உறவே, தமிழே என ஆரம்பித்தேன். தமிழில் இருந்து பிறந்தது தான் உங்கள் பாஷையும். அதனால் நீங்களும் அதில் உட்படுவீர்கள்” என்றார். அதாவது தமிழில் இருந்து தான் கன்னடம் மொழி உருவானது என்று கமல் சொன்னது தற்போது கர்நாடகாவில் எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறது.

Advertisment

கன்னட மொழியை கமல் அவமதித்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பா.ஜ.க. கர்நாடக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், “கமல்ஹாசன் தனது தமிழ் மொழியைப் போற்றும் போது, சிவ ராஜ்குமார் உட்பட கன்னட மொழியை அவமதித்துள்ளார். இது ஆணவத்தின் உச்சம். ஒரு மொழி இன்னொரு மொழியில் இருந்து பிறந்தது என்று சொல்வதற்கு கமல்ஹாசன் ஒரு வரலாற்றாசிரியர் அல்ல. கன்னட மொழி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது. கமல்ஹாசன் உடனடியாக கன்னடர்களிடம் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இவரை தவிர்த்து கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி, “கமலை நாங்கள் எச்சரிக்கிறோம். உங்களுக்கு கர்நாடகாவில் வியாபாரம் வேண்டும். ஆனால் கன்னடத்தை அவமதிப்பீர்களா இன்று நீங்கள் எங்கள் மாநிலத்தில் இருந்திருந்தால், உங்கள் மீது நாங்கள் கருப்பு மை பூசி இருப்போம். கர்நாடகாவிற்கும் அதன் மக்களுக்கும் எதிராகப் பேசினால், உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கும். உங்கள் படம் தடை செய்யப்படும்” என எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் கன்னட சலுவளி வாட்டாள் பக்‌ஷா கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் சில கன்னட அமைப்புகள் கமலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். அதோடு பெங்களூருவில் தக் லைஃப் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதற்காக வாழ்த்தி வைத்திருந்த ரசிகர்களின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை கிழித்து, கமல்ஹாசனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Advertisment

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா கமல் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. பாவம் கமல்ஹாசனுக்கு அது தெரியாது” என்றுள்ளார்.