
தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’. படத்தின் பாடல்கள் ஏற்கனவே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ‘கர்ணன்’ படம் நாளை (ஏப்ரல் 9) வெளியாக இருக்கிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்தக் கட்டுப்பாடுகளில், திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ‘கர்ணன்’ படம் திரையரங்குகளில் வெளியாகுமா என சந்தேகம் கிளம்பியது.
இந்தநிலையில் கர்ணன் படம் திரையரங்கில்தான் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்" என கூறியுள்ளார்.