Skip to main content

"சமநிலையில் மனிதர்களை வைத்திருப்பது காவல் தெய்வங்கள் தான்" - காந்தாரா இயக்குநர் ரிஷப் ஷெட்டி

Published on 17/10/2022 | Edited on 17/10/2022

 

kantara movie director Rishab Shetty press meet

 

'கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள கன்னடப் படம் 'காந்தாரா' சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் கிஷோர், மூத்த கன்னட நடிகர் அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி, சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கன்னடத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு நேற்று முன்தினம் (15.10.2022) வெளியானது. இப்படத்தைப் பார்த்த சிம்பு, கார்த்தி உள்ளிட்ட திரை பிரபலங்களும், சினிமா விமர்சகர்களும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். 

 

தமிழகம் முழுவதும்  ‘ட்ரீம் வாரியர்’ பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு வெளியிட்டுள்ளார். இப்படத்தின் வெளியீட்டை தொடர்ந்து இயக்குநரும், நாயகனுமான ரிஷப் ஷெட்டி சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “காந்தாரா, அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் மர்மமான பகுதி. மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையே நடைபெறும் மோதலைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். 

 

நான் அடிப்படையில் விவசாயம் செய்யும் குடும்பத்திலிருந்து திரையுலகிற்கு அறிமுகமானேன். என்னுடைய சொந்த ஊரில்தான் படப்பிடிப்பு நடத்தினேன். நான் சிறு வயதில் என்னென்ன பார்த்து ரசித்தேனோ, அதனைத்தான் இந்தப் படத்தில் படமாக்கியுள்ளேன். அப்பொழுது இருந்த சமூகம், மக்களின் நம்பிக்கை, நம்முடைய கலாச்சார வேர்கள் ஆகிய அனைத்தையும் முன்னிலைப்படுத்திதான் இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளேன். இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநில மக்களுக்கும், அவர்கள் வாழ்கின்ற பகுதியில் காவல் தெய்வங்களும், குலதெய்வங்களும் உண்டு. அது போன்ற காவல் தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்தான் நாங்கள்.

 

காவல் தெய்வங்கள்தான், சமூகத்தில் உயர்ந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் சமநிலையில் மனிதர்களை வைத்திருக்கும் சக்தி படைத்தது என எண்ணுகிறேன். ‘காந்தாரா’ படத்தில் இடம் பெற்றிருப்பதுபோல் நான் சிறு வயதில் தெய்வ வேடமிட்டு வருபவர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் அனைவரையும் சமமாகவே கருதுவார்கள். இது தற்போது எந்த மாதிரியான விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது என்பதை விட, இதனை மையப்படுத்தி சமூகத்தில் ஒரு நேர் நிலையான அதிர்வலைகளை ஏற்படுத்த இயலும் என்பதனை படைப்பாக்கி இருக்கிறேன். இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே பாலமாக இந்த காவல் தெய்வங்கள் இருக்கிறது என்ற நம்பிக்கையை மையப்படுத்தி தான் இந்தப் படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்