காந்தாரா பட வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ‘காந்தாரா ஏ லெஜண்ட் - சாப்டர் 1’ என்ற தலைப்பில் உருவாகிறது. இப்படத்தின் கதை முதல் பாகத்தின் ப்ரீக்குவலாக உருவாகிறது. இப்படத்தில் ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவயா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக பிரம்மாண்டமான விஷுவல்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படம் கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட ஏழு மொழிகளில் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பித்து நல்ல ஓபனிங்கை வட இந்தியா முழுவதும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே படக்குழு புரொமோஷன் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை பெங்களுர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இதில் ஹைதரபத்தில் நடந்த நிகழ்வில் அம்மாநிலத்தின் மொழியான தெலுங்கில் பேசாமல் கன்னடத்தில் பேசினர். இது தெலுங்கு ரசிகர்களை கோவமடையச் செய்துள்ளது. அவர்கள் ரிஷப் ஷெட்டியை சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாளை புரிமோஷன் நிகழ்ச்சியை படக்குழு நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் கரூரில் ஏற்பட்ட துயர சம்பவத்திற்காக நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “சமீபத்தில் நடந்த எதிர்பாராத சம்பவத்தைக் கருத்தில் கொண்டு, சென்னையில் திட்டமிடப்பட்ட எங்கள் காந்தாரா அத்தியாயம் 1 விளம்பர நிகழ்வை நாளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுடன் ஒற்றுமையாக நிற்க வேண்டிய நேரம் இது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்து கொள்கிறோம். சரியான நேரத்தில் தமிழ்நாட்டு மக்களை நாங்கள் சந்திப்போம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த 27ஆம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு மூச்சுத்திணறலாலும் மயக்கத்தாலும் 41 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.