ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய கன்னடப் படம் 'காந்தாரா'. கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலித்ததாகக் கூறப்பட்டது.
இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘காந்தாரா ஏ லெஜண்ட் - சாப்டர் 1’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. காந்தாரா படத்தின் ப்ரீக்குவலாக உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் போஸ்டர் முன்னதாக வெளியானது. கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட ஏழு மொழிகளில் இப்படம் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலமாக நடந்த நிலையில் தொடர் விபத்துகளை சந்தித்து வந்தது. ஜூனியர் ஆர்டிஸ்ட் கபில், நகைச்சுவை நடிகர் ராகேஷ் புஜாரி, நடிகர் விஜூ ஆகியோர் படப்பிடிப்பின் போது உயிரிழந்தனர். சமீபத்தில் கூட கர்நாடகா சிவ மோகா மாவட்டத்தில் மணி நீர்த்தேக்கம் பகுதியில் படப்பிடிப்பு நடந்த போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததைக்கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், 250 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பின் உச்சக்கட்டத்தை விவரிக்கிறது.